நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நாளை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அமைச்சரவையில் சிலருக்கு பதவி உயர்வும் சில புது முகங்கம் பங்குபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். மோடி பிரதமரான பின்னர் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியான பின்னர் முதல் அமைச்சரவை மாற்றம் இது.
72 மந்திரிகள் கொண்ட மோடியின் அமைச்சரவையில் சுமார் 12 பேர் வரையில் வெளியேற்றிவிட்டு, அதே எண்ணிக்கையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என ஜனாதிபதி மாளிகை தரப்பில் சொல்லப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்துக்கு வசதியாக அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, சஞ்சய் குமார் பல்யான், பக்கன் சிங் குலஸ்தே ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
கட்சி தலைமை உத்தரவின் படி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். கேபினெட் அமைச்சர்களான உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரை பதவி விலகுமாறு பிஜேபி தலைமை உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் தவிர வேறு சில மந்திரிகளும் நீக்கப்படலாம். சமீபத்தில் ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாக சுரேஷ் பிரபு சொல்லியிருந்தார். அவருக்கு வேறு பொறுப்புக்கள் க்கொடுக்கப்படலாம்.
அருண் ஜெட்லியிடம் நிதி, பாதுகாப்புத்துறை ஆகிய இரண்டு பொறுப்புக்கள் உள்ளன. ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கூடுதல் பொறுப்புகளை வைத்துள்ளனர். கூடுதல் பொறுப்புகள் புதிய அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.
புதிய அமைச்சரவையில் பிஜேபி சார்பில் பூபேந்தர யாதவ், கட்சியின் துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே, பிரகலாத் படேல், சுரேஷ் அங்கடி, சத்யபால் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கூட்டணி கட்சிகள் சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆர்.சி.பி.சிங், சந்தோஷ் குமார் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அ இ அ தி மு க இன்னமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. ஆனால் பிஜேபியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர். அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை, பி.வேணுகோபால் ஆகியோர் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று அமீத் ஷாவை தம்பிதுரை இது தொடர்பாக சந்தித்து பேசியிருக்கிறார்.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் 350 இடங்களை வெல்ல வேண்டும் என அமீத் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை கருத்தில் கொண்டே அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.