ஒரு வார காலப்பகுதியில், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 241 சதவீதம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், மாநிலத்தில் 1,187 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் மொத்த செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 10,292 ஆகும். அதில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் மட்டும் 8,671 நோயாளிகள் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பெங்களூரு நகரத்திலிருந்து 3 பேர் மற்றும் தட்சிண கன்னடா, துமகுரு மற்றும் உத்தர கன்னடாவில் இருந்து தலா ஒருவர் என கர்நாடகாவில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன,
மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமையை ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் மால்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதற்கான முடிவு எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பெங்களூரில் நிலவும் கொரோனா நிலைமை மற்றும் தொற்றுநோய் பரவல் குறித்து விவாதித்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார்.
வழிகாட்டுதல்களை மக்கள் புறக்கணித்தால் ஊரடங்கு விதிக்கப்படுமா என்று கேட்டபோது, பொம்மை, இது குறித்து மாநில அரசு மிகவும் தெளிவாக உள்ளது என்றும் பொது நலனுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும் ஊரடங்கை விதிக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“