ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : காங்கிரஸ் ஆட்சியின் போது, ப. சிதம்பரம், இந்தியாவின் நிதி அமைச்சராக செயல்பட்டு வந்தார். 2006ம் ஆண்டு, ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி ரூபாய் வரை அந்நிய முதலீடு செய்ய மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் மத்திய அரசை நாடியது.
600 கோடி ரூபாய் வரையிலான அந்நிய முதலீட்டிற்கு மட்டுமே நிதி அமைச்சகம் அனுமதி வழங்க இயலும். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரங்களை மீறி இந்த முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்தார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை - கைது செய்யத் தடை
இந்த அனுமதியை பெற்று தருவதற்காக ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனத்திற்கு முறைகேடாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்ற புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கினை அமலாக்கத்துறையும், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கினை புலனாய்வுத் துறையும் மேற்கொண்டு வருகிறது. அவர்களின் விசாரணை அடிப்படையில் ஜூலை 19ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தந்தை மற்றும் மகனை கைது செய்ய சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி டிசம்பர் 18 வரை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க : சிபிஐக்கு தடை விதித்த மாநில அரசுகள்