மும்பை பைகுலா சிறையில் பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சிறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டிய சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்ய இந்திராணி முகர்ஜிக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைமை பதவி வகித்துவந்த இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் சக கைதியான மஞ்சு ஷெட்டி என்பவர் கடந்த 23-ஆம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரால் கைதி மஞ்சு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவரது பிறப்புறுப்பில் லத்தி சொருகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் சக கைதிகள் நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட சுமார் 200 கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்திராணி முகர்ஜி சார்பில் அவரது வழக்கறிஞர் செவ்வாய் கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்திராணி முகர்ஜியை தான் நேரில் சந்தித்தபோது, அவரது கைகள், கால்கள் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும், சிறையில் நிகழ்ந்த மரணத்தை தட்டிக்கேட்டதால் தன்னையும் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதிகாரிகள் பாலியல் ரீதியில் இந்திராணி முகர்ஜியை அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜி புதன் கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.அதில், கைதி மஞ்சுவின் உடல் நலம் குறித்து தான் விசாரித்தபோது அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அதன்பிறகே அவர் உயிரிழந்த விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சிறைத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதால் கை, மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு, தன்னால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், சிறையில் விளக்கை அணைத்துவிட்டு தடியடி நடத்த சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை எதிர்த்தால், கைதி மஞ்சுவிற்கு நிகழ்ந்த கதி உனக்கும் நிகழும் என கண்காணிப்பாளர் தன்னை மிரட்டியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறையில் தான் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய இந்திராணி முகர்ஜிக்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதற்கு முன்னதாக, இந்திராணி முகர்ஜிக்கு முழு பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டார்.
இதனிடையே, உணவை புறக்கணிக்குமாறு கூறி மற்ற சிறைக்கைதிகளை கலவரத்திற்கு தூண்டியதாகவும், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தி அதிகாரிகளை தாக்க வேண்டும் என இந்திராணி முகர்ஜி பேசியதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.