சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், ஆகிய மூன்று முன்னுரிமைக் குழுக்கள், இரண்டாவது டோஸ் பெற்ற 39 வாரங்களுக்கு பிறகு, "முன்னெச்சரிக்கை டோஸுக்கு" தகுதி உடையவர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது எந்த தடுப்பூசி மையத்திற்கும் செல்லலாம் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
“CoWIN இல் புதிய பதிவு தேவையில்லை. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் நேரடியாக எந்த தடுப்பூசி மையத்திற்கும் செல்லலாம். “ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் வசதி இன்று (சனிக்கிழமை) மாலை முதல் தொடங்கும். ஆன்-சைட் அப்பாயிண்ட்மெண்ட்டுடன், தடுப்பூசி போடுவது ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது, ”என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த வார தொடக்கத்தில், "முன்னெச்சரிக்கை" டோஸ், முதல் இரண்டு டோஸ்களைப் போலவே இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு, இணை நோயை நிரூபிக்க மருந்துச் சீட்டு அல்லது மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 25 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 10 முதல் மூன்று குழுக்களுக்கான மூன்றாவது டோஸ் மற்றும் ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை அறிவித்தார்.
சுகாதார அமைச்சக தகவலின்படி, வெள்ளிக்கிழமை மட்டும் நாட்டில் 1,17,100 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் செயலில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,71,363 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நேரத்தில் தடுப்பூசி இயக்கம் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் தடுப்பூசி கவரேஜ் வெள்ளிக்கிழமை 150 கோடி அளவைத் தாண்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 7 மணி வரை 81 லட்சத்திற்கும் அதிகமான (81,50,982) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி முன்னணியில் ஒரு குறிப்பிடத்தக்க நாள்! 150 கோடி மைல்கல்லை கடந்துள்ள சக குடிமக்களுக்கு வாழ்த்துகள். எங்கள் தடுப்பூசி இயக்கம் பல உயிர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், கோவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றுவோம்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
“எங்கள் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக்க உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்தியா நன்றி தெரிவிக்கிறது. மக்களுக்கு தடுப்பூசி போடும் எங்கள் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி. தகுதியுடைய அனைவரையும் தங்கள் ஷாட்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்றாக, கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவோம், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.