இந்தியாவிலேயே டெல்லி, மும்பை ஆகிய இரு நகரங்களில் தான் கஞ்சா நுகர்வு அதிகளவில் இருப்பதாக, இணையத்தளம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சீடோ (SEEDO) எனப்படும் இஸ்ரேலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்தான், வீடுகளில் கஞ்சா வளர்க்க தேவையான உபகரணங்களை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனம், எந்தெந்த நகரங்களில் கஞ்சா அதிகளவில் நுகரப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவை சேர்ந்த புதுடெல்லி மூன்றாவது இடத்தையும், மும்பை ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. முதலாவது இடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரமும், இரண்டாவது இடத்தை பாகிஸ்தானின் கராச்சி நகரமும் பிடித்துள்ளன. இந்த இரண்டு நாடுகளிலும் கஞ்சா பயன்படுத்துதல் குற்றத்திற்குரிய செயலாகும். 120 நாடுகள் குறித்த பட்டியலை சீடோ வெளியிட்டது.
மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் குறைந்த விலைக்கே கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றன. டெல்லியில் ஒரு கிராம் கஞ்சா ரூ.278க்கும், மும்பையில் ஒரு கிராம் கஞ்சா ரூ.290க்கும் கிடைக்கின்றன. உலகிலேயே மிகக்குறைந்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்யப்படும் நகரங்கள் இவை இரண்டுதான் என்பது உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.
இந்தியாவில் மலைப்பிரதேசங்களில் கஞ்சா செடி மிக இயல்பாகவே வளரக்கூடியது. இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985-ன் படி, கஞ்சா செடி வளர்த்தல் மற்றும் வணிகம் செய்தல் ஒரளவு தடை செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை சம்பந்தமாக கஞ்சா செடி வளர்த்தலை இந்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால், சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா செடி வளர்த்தால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும், அதனை வாங்கினால், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் கிடைக்கும்.