சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறிய சில நாட்களுக்குப் பிறகு, நிராயுதபாணியாக இருந்தும் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உண்மையில் டெண்டு இலை பறிப்பவர்கள் என்று அவர்களில் சிலரின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களை மாநில பாதுகாப்பு அமைப்பு கடுமையாக நிராகரித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘They were unarmed tendu leaf pickers, not Maoists’: In Chhattisgarh’s Bijapur, families raise questions on encounter that killed 12
வெள்ளிக்கிழமை அதிகாலை, பிஜப்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பீடியா கிராமத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காடுகளுக்குள் ஆழமாக அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மொபைல் இணைப்பு இல்லை, அங்கு செல்ல ஒருவர் ஐந்து போலீஸ் செக்போஸ்ட்களை கடக்க வேண்டும். அருகிலுள்ள சந்தையான கங்களூர் 30 கி.மீ தொலைவில் உள்ளது.
பாதுகாப்புப் படையினரின் கூற்றுப்படி, கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உறுப்பினர்களின் கண்கள் மற்றும் காதுகளாக வேலை செய்யும் போராளிகள் ஆவர், மேலும் ஆறு பேர் போராளிகள், அப்பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருவர் போராளிகளின் தளபதி. அவர்கள் மீதான மொத்த சன்மானம் ரூ. 31 லட்சம், இதில் கீழ்மட்ட போராளிகளுக்கு ரூ.10,000-30,000.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பாதுகாப்புப் படைகளால் போராளிகள் என்று கூறப்படும் சானு ஹவ்லாம், ஓயாம் பீமா, துலா தமோ மற்றும் ஜோகா பார்சே ஆகிய நால்வரின் குடும்பங்களுடன் பேசியது.
இந்தக் குடும்பங்களின் கூற்றுப்படி, அதிகாலையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்தபோது ஆண்கள் பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களைத் துரத்திச் சென்று சுற்றி வளைத்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதைப் பார்த்து, இலை பறிக்கும் பெண்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஓடினர், ஆனால் திரும்பிச் சென்றனர். என்ன நடந்தது என்பதை இந்த பெண்களும், அதே போல் கொல்லப்பட்ட ஆண்களுடன் சுற்றி வளைக்கப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்ட சில ஆண்களும் கூறியதாக குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஓயம் பீமாவின் தந்தை மங்கு ஓயாம், “பாதுகாப்புப் படையினர் அவர்களை ஒரு மூலையில் துரத்தினர். அவர்களில் ஒருவர் எழுந்து நின்று, நாங்கள் பொதுமக்கள் என்று கூறினார், ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சிலரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் சனிக்கிழமை திரும்பி வந்தபோதுதான் கொல்லப்பட்டது யார் யார் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்று குற்றம்சாட்டினார்.
பீமாவுக்கு மனைவியும், மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இறந்தவர்களில் சானு ஹவ்லாம் (40) என்பவரும் அடங்குவார், அவருக்கு தாய், மனைவி மற்றும் ஆறு குழந்தைகள் உள்ளனர். சானு ஹவ்லாமைக் கைது செய்பவருக்கு ரூ. 30,000 வெகுமதி அறிவிக்கப்பட்டது பற்றிக் கேட்டதற்கு, அவரது தாயார் சுக்லே, “எனக்கு அது பற்றித் தெரியாது” என்று கூறினார். மேலும், என் மகனால் கேட்கவோ பேசவோ முடியாது. கடந்த காலங்களில், போலீசார் அவரை இரண்டு முறை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர், பின்பு அவரை விடுவித்தனர். ஒருமுறை, நான் தலையிட்டபோது, என்னை அடித்தார்கள்,” என்றும் அவர் கூறினார். சுக்லே கூறுகையில், தனது மகன் ஒவ்வொரு வாரமும் கங்களூர் சந்தைக்கு சென்று குடும்பத்திற்காக பொருட்கள் வாங்கி வருவார். அவர் நிராயுதபாணியாக இருந்தார். நீங்கள் அவரைக் கைது செய்திருக்க முடியும், அவரை ஏன் சுட வேண்டும்,” என்று கூறினார்.
அவரது மனைவி மங்கிலி, ஒரு நாள் கழித்து காவல்துறை வெளியிட்ட ஆவணத்தில் அவரது முகத்தை குடும்பத்தினர் பார்த்தபோதுதான் அவரது மரணம் குறித்து தங்களுக்குத் தெரியவந்தது என்று கூறினார்.
இதேபோல், ஜோகா பார்ஸின் சகோதரர் பார்சே துலா கூறுகையில், “அவர் டெண்டு இலைகளை பறிக்கச் சென்றிருந்தார், நான் வீட்டில் இருந்தேன். மறுநாள் வெளியான அறிக்கையின் மூலம் அவர் மரணம் குறித்து அறிந்தேன். அவர் ஒரு குடிகாரர் மற்றும் மிகவும் நோய்வாய்ப்பட்டவர். அவர் எங்களுடன் தங்கியிருந்தார், எனவே அவர் ஒரு போராளிக்குழு உறுப்பினர் அல்ல என்பதை நான் அறிவேன். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. ஜோகாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்,” என்று கூறினார்.
மகனைக் கைது செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, துலா தாமோவின் தந்தை, “நக்சல்கள் கைது செய்யப்பட்டால் வழங்கப்படும் வெகுமதி பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம். எனது மகனைக் கைது செய்வதற்காக அறிவிக்கப்பட்ட வெகுமதியைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை. அவர் தொடர்ந்து கங்களூர் சந்தைக்கு சென்று வருவார்; அப்போது ஏன் அவரை கைது செய்யவில்லை? அவர் பைலடிலாவில் கட்டிடத் தொழிலாளியாக கூட பணிபுரிந்தார், ஆனால் அவர் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை,” என்று கூறினார்.
‘முதலில் சுட்டார்கள்’
குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து பீஜப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவிடம் கேட்டதற்கு, “மாவோயிஸ்டுகள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பதில் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் முதன்மையான முன்னுரிமை அவர்களின் ஆயுதங்களைப் பாதுகாப்பதாகும்; ஒரு போராளி சுடப்பட்டால், மற்றவர்கள் அவரது ஆயுதத்துடன் ஓடிவிடுவார்கள்,” என்று கூறினார்.
சரணடைந்த நக்சல்களால் இறந்தவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
"நாங்கள் அவர்களைக் கொல்ல விரும்பினால், இன்னும் பலரை ஏன் கைது செய்ய வேண்டும்? கொல்லப்பட்டவர்கள் முதலில் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். படைகளைப் பார்த்து அவர்கள் மாற்றிய சில சீருடைகளையும் நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்று ஜிதேந்திர குமார் யாதவ் கூறினார்.
மேற்கு பஸ்தார் பிரிவில் உள்ள பீடியா பகுதி பெரும்பாலும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்களின் கடைசி மூன்று கோட்டைகளில் ஒன்றாக இருப்பதாகவும், மற்ற இரண்டு அபுஜ்மத் மற்றும் தெற்கு பஸ்தார் என்றும் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். பீஜப்பூரில் சுமார் 3,000 போராளிகள் உள்ளனர், இதில் 600 பேர் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.