தகுதி, திறமை இவை இரண்டும் இருந்தும் உங்களுக்கு எங்காவது வேலை கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? மூலையில் உட்கார்ந்து சோர்ந்துபோய் விடுவீர்களா? அழுவீர்களா?
ஆனால், ஜெய்பூரை சேர்ந்த பிரதீக் அகர்வால் தனக்கு வேலை மறுக்கப்பட்டபோது, சோர்ந்துபோய் விடவில்லை. மாறாக, மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தார். பிரதீக் அகர்வால் கண் பார்வையற்றவர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/bc260a05-32ed-4bbc-a54e-76ecd570dc75-300x225.jpg)
கண் பாரவையற்றவராக இருந்தாலும் நல்ல படிப்பு, திறமையைக் கொண்டிருப்பவர் பிரதீக். நீம்ரனாவில் உள்ள என்.ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் முடித்தார். அதன்பின், கேம்பஸ் இண்டர்வியூவின்போது அனைத்து நேர்காணல், தேர்வுகளிலும் வெற்றிபெற்றாலும், கண் பார்வையற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
”இண்டர்வியூவில் இறுதிச்சுற்றின்போது, என்னை நேர்காணல் செய்தவர்கள் என் திறமையைக் கண்டு வியந்ததாகவும், நான் மற்றவர்களுக்கு ஊக்கம் எனவும் கூறினார். ஆனால், கடைசியில் பார்வையற்ற மாணவனை வேலைக்கு எடுக்க முடியாது என கூறிவிட்டனர்”, என்கீறார் பிரதீக்.
அதன்பிறகு சோர்ந்துவிடாமல், கல்லூரி இறுதியாண்டில் Daedal Technovations என்ற சொந்த நிறுவனத்தை துவங்கினார்.
“ஆரம்பத்தில் எனக்கு வாடிக்கையாளர்கள் இல்லை. வெயிலில் ஒவ்வொரு கடையாக சென்று மென்பொருள் குறித்த உதவி ஏதேனும் வேண்டுமா என கேட்பேன். சில வாடிக்கையாளர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து விசாரிப்பர். ஆனால், நேரில் சென்றால் குழம்பிவிடுவார்கள். நான் தான் போனில் பேசியதா என கேட்பார்கள். அதன்பின், தங்களுடைய ப்ராஜெக்டை கண் பார்வையற்றவர்களுக்கு தர மாட்டோம் என கூறிவிடுவர்”, என ஆரம்பத்தில் தான் கண்ட இன்னலை விளக்குகிறார் பிரதீக்.
அதன்பிறகு, இணையத்தளம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தார் பிரதீக். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளிலிருந்து அவருக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/85c48604-2ef9-4540-8a2e-65152e9eee10-300x206.jpg)
சிறுவயதில் அவர் படிக்கும்போது எந்தவொரு பள்ளியும் அவரை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதன்பின், ஒரேயொரு பள்ளி மட்டும் பிரதீக்கை அனுமதித்தது. அவரது தாயார்யும், தன் மகனுக்கு பாடங்களில் உதவுவதற்காக பிரெய்லி கற்றுக்கொண்டார்.
இன்று நம் அனைவருக்கும் நம்பிக்கை ஒளியூட்டுபவராக இருக்கிறார் பிரதீக்.