இரண்டு மாதங்களுக்கு மேலாக, கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானங்கள் சேவை, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேற்று தெரிவித்தார். முதல் கட்டமாக மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
கொரோனா ஆபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தொடர்பாக, மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் 17.05.2020 அன்று வெளியிட்டது. ஊரடங்கு 31.05.2020 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் பட்டியலில் இருந்து பயணிகளின் உள்நாட்டு விமான சேவையை நீக்கியது.
விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள்/டாக்சிகள் போன்ற வாகனங்கள் செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க மாநில அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. மேலும், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான விரிவான நிலையான இயக்க நடைமுறையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
"உள்நாட்டுவிமானப் பயணிகள் சேவை வரும் 25-ம் தேதி முதல் அளவீடு செய்யப்பட்ட முறையில் மீண்டும் தொடங்கப்படும். அனைத்து விமான நிலையங்களும், விமான நிறுவனங்களும் மே 25 முதல் விமான சேவைகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் இயக்கத்திற்கான நிலையான இயக்க நடைமுறையை விமான போக்குவரத்து அமைச்சகம் தனியாக அறிவிக்கும் என்று ஹர்தீப்சிங் பூரி தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
டெல்லி, மும்பை போன்ற முக்கிய பெருநகரங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களில் இருப்பதால், சில மாநில அரசுகள் ஏற்கனவே விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து கவலை தெரிவித்து வந்தன. விமான சேவைகள் மீண்டும் இயக்குவது குறித்து மத்திய அரசு தனிச்சையாக முடிவெடுக்காது என்று கடந்த செவ்வாயன்று ஹர்தீப்சிங் பூரி குறிப்பிட்டார்.
இதற்கிடையே, விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்காக உயர்மட்ட விமான நிர்வாகிகள் நேற்று மாலை பிற்பகுதியில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தனர்.
30-35%” விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படலாம் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், விமானங்களின் தேவைகள் குறைவாக இருப்பதால், நாங்கள் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க திட்டமிட்டுளோம் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் விமான நிறுவனந்த்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்
"சில பெரிய விமான நிலையங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களில் தான் உள்ளது. கொரோனா பரவல் தன்மையை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் எந்தவொரு பொது போக்குவரத்தையும் அனுமதிக்கவில்லை . அத்தகைய சந்தர்ப்பத்தில், மக்கள் விமானங்களை பயன்படுத்த மக்கள் விரும்ப மாட்டார்கள்,”என்று அந்த நிர்வாகி தெரிவித்தார். மேலும், பசுமை மண்டலங்களுக்கு இடையே மட்டும் விமானங்களை இயக்குவது வணிக ரீதியாக சாத்தியமற்ற செயல் என்றும் தெரிவித்தார்.
"விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறை மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், பாதுகாப்பான/விரைவான விமான போக்குவரத்து சேவை இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, கோவிட் -19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பணியாளர்களால் சோதனை செய்த பின், பயணிகளின் போர்டிங் பாஸ் முத்திரையிடும் நடைமுறை கைவிடப்படுவதாக விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்தது.
பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பயணத்தின் போது சமூக விலகல் நெறிமுறையை கையாள்வதற்கும் பின்பற்ற வேண்டிய வரைவு நிலையான இயக்க நடைமுறையை(SOP) மத்திய அரசு தயாரித்தது. விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், தரை கையாளுதல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டறிந்தது.
விமான நிறுவனங்கள் தங்கள் திறனைக் காட்டிலும் மிகக் குறைவாக இயங்கும் என்பதால் கட்டணங்கள் உயருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சார், " மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் என்பதால், 5 ரூபாய்க்கு விற்கும் ஒன்றை 50 ரூபாய்க்கு விற்க நாங்கள் விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.