/tamil-ie/media/media_files/uploads/2017/11/cancer-boy_759.jpg)
நம் குடும்பத்தில் யாருக்காவது சாதாரண நோய் வந்தாலே பதறிபோய்விடும். மன உளைச்சல் ஒரு பக்கம் என்றால், மருத்துவ செலவு இன்னொரு கவலை. அப்படித்தான் மும்பையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் புற்றுநோய் ஏற்பட்டது.
தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதையும், அதனால் தன்னுடைய கனவுகளும், குடும்பமும் சிதைந்து போனது என்பதை உருக்கமாக ‘Humans of Bombay' என்ற முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், சிறு வயதில் தன் தந்தை 52 வயதிலேயே பணி ஓய்வு பெற்றுவிட வேண்டும் என தான் சொல்லிவந்ததாகவும், அதன்பின் முழு பொறுப்பையும் தானே சுமக்க வேண்டும் என எண்ணியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் சக்திக்கு மீறி தன்னை எம்.பி.ஏ. படிக்க வைக்க தந்தை பட்ட துன்பங்களையும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.
ஆனால், அந்த இளைஞருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவரது பெற்றோர் மிகுந்த துன்பம் அடைந்தனர். ஒவ்வொரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கும் ரூ.2.5 லட்சம் செலவானது.
எலும்பு மஜ்ஜையை மாற்ற அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அவர் தந்தையின் எலும்பு மஜ்ஜை அவருக்கு பொருந்திபோனது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணம் இல்லாமல்போகவே அந்த இளைஞரின் சிகிச்சையே தடைபட்டுள்ளது.
தன்னுடைய புற்றுநோய் பாதிப்பு குறித்தும், அதற்கான மருத்துவ செலவு குறித்தும் எழுதிய பதிவை படித்தவர்கள் அவருக்கு நிதியுதவி அளித்தனர். எவ்வளவு தெரியுமா? ஒரே நாளில் ரூ.25 லட்சம்.
மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் மனிதத்தை இதுபோன்ற நிகழ்வுகளில் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.