நில அபகரிப்பு புகாரில் சிக்கிய கேரள மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. இவர் மீது ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அனுபமா நில அபகரிப்பு புகாரை எழுப்பி, அது தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்து இருந்தார். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. தாமஸ் சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தனர். எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.பி. பீதாம்பரம் மூலமாக முதல்வர் பினராயி விஜயனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 16 மாதங்களே ஆகின்றன. அதில், மூன்றாவது அமைச்சராக தாமஸ் சாண்டி ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, அரசுப் பணிகளில் உறவினர்களை நியமித்தது தொடர்பான விவகாரத்தால், கேரள தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பெண் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மூன்றாவதாக, சுசீந்திரனுக்கு பதிலாக போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட தாமஸ் சாண்டி, நில அபகரிப்பு புகாரில் சிக்கி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.