உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் அப்துல் நசீர் ஓய்வுபெற்ற சில வாரங்களுக்குள் ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு, அத்தகைய நியமனங்கள் “பெரிய கறை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர், அயோத்தி நில உரிமை பிரச்னை மற்றும் முத்தலாக் சவால் போன்ற முக்கியமான மற்றும் சென்சிடிவ் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வுகளில் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் ஜனவரி 4 அன்று ஓய்வு பெற்றார். இருப்பினும் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸின் விமர்சனத்தை நிராகரித்தது. மேலும், கடந்த காலங்களில் பல்வேறு பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது என்றும் பா.ஜ.க விமர்சித்தது.
இதையும் படியுங்கள்: ஆந்திர ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நசீர் நியமனம்; அயோத்தி, முத்தலாக் தீர்ப்புகள் வழங்கிய பெஞ்சில் இருந்தவர்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர், ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து நியமனம் பெற்ற அயோத்தி தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மூன்றாவது நீதிபதி ஆவார். இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நீதிபதி அசோக் பூஷன், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, 2021ல் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, ராஜ்யசபாவில் 2013 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியின் கருத்துகளை நினைவு கூர்ந்தார், “ஓய்வுக்குப் பிந்தைய வேலைக்கான ஆசை ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கிறது” மேலும் “இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்…” என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும், அபிஷேக் சிங்வி, “நாங்கள் தனிநபர்களைப் பற்றி பேசவில்லை… கொள்கை அடிப்படையில், நாங்கள் அதை எதிர்க்கிறோம்… கொள்கை அடிப்படையில், இது ஒரு பெரிய கறை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் கூறினார்.
விமர்சனங்களை நிராகரித்த பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி, ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதை காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். மேலும், “முன்னாள் நீதிபதிகள் கடந்த காலங்களில் எண்ணற்ற முறை வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டமும் ஓய்வுக்குப் பின் நீதிபதிகள் நியமனத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை” என்றும் ராஜ்யசபா உறுப்பினரான அனில் பலுனி கூறினார்.
சி.பி.எம் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ஏ.ஏ.ரஹீமும் இந்த நியமனம் குறித்து கேள்வி, “நீதிபதி அப்துல் நசீரை ஆளுநராக நியமித்த மத்திய அரசின் முடிவு நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் (நசீர்) வாய்ப்பை ஏற்க மறுக்க வேண்டும். நாடு தனது சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது. மோடி அரசின் இத்தகைய முடிவுகளால் இந்திய ஜனநாயகத்தின் மீது கறை படிந்துள்ளது” என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 5, 1958 இல் பிறந்த நீதிபதி நசீர் 2003 இல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017 இல் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார். பல மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில், நசீர் பதவி உயர்த்தப்பட்டார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியை சேர்த்து, பெஞ்சில் பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக, கொலீஜியம் அவரது நேரடி உயர்வை நியாயப்படுத்தியது.
அவர் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த சக நீதிபதி எச்.ஜி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை நிராகரித்தார். “உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் மதம் அல்லது ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை” என்று நீதிபதி ரமேஷ் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றிய போது, நீதிபதி அப்துல் நசீர் குறிப்பிடத்தக்க வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய பல பெஞ்ச்களில் ஒரு பகுதியாக இருந்தார். அயோத்தி தீர்ப்பில், உரிமையியல் சர்ச்சையை இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒருமித்த தீர்ப்பின் ஒரு பகுதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்தார், அவர் முன்பு 4: 1 பெரும்பான்மை கருத்துக்கு எதிராக கருத்து வேறுபாடு கொண்டிருந்தார், அது பிரச்சினையை ஒரு பெரிய பெஞ்சிற்கு பரிந்துரைக்க மறுத்தது.
மசூதியில் தொழுகை நடத்துவது இஸ்லாத்தின் “அத்தியாவசிய அம்சம்” அல்ல என்று கூறிய இஸ்மாயில் ஃபரூக்கி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதியரசர் அப்துல் நசீரின் கருத்து மட்டுமே இந்த முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. அவர் 2017 முத்தலாக் தீர்ப்பில் 3:2 சிறுபான்மைக் கருத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதில் அவர் நடைமுறை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று கூறினார்.
தனியுரிமைக்கான உரிமையை அடிப்படை உரிமையாகக் கருதிய 2017 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பின் ஒரு பகுதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கோரப்பட்ட ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை மீண்டும் கணக்கிடக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வேண்டுகோளை நிராகரித்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய பணமதிப்பிழப்பு முடிவை நீக்கிய தீர்ப்பின் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் 19(2) பிரிவில் இல்லாத கூடுதல் கட்டுப்பாடுகளை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமான பேச்சுரிமைக்கு விதிக்க முடியாது என்று கூறிய அரசியலமைப்பு பெஞ்சின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, நீதிபதி அப்துல் நசீர் டிசம்பர் 2021 இல், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த வழக்கறிஞர்கள் அமைப்பான அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்தின் 16வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் “இந்திய சட்ட அமைப்பின் காலனித்துவ நீக்கம்” என்ற தலைப்பில் பேசினார்.
கூடுதல் தகவல்கள்: ENS, புது டெல்லி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil