Advertisment

'சபரிமலை பிரசாதத்தில் ஹலால் வெல்லம்'... திருப்பதி லட்டு விவகாரத்திற்கு முன்பே எழுந்த சர்ச்சை

கடந்த 2019-ஆம் ஆண்டில் சபரிமலை கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட வெல்லம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

author-image
WebDesk
New Update
Sabarimala online booking without darshan Kerala Tamil News

சபரிமலை கோயில், கேரளா

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. ஆனால், இதற்கு முன்பாகவே சபரிமலை கோயிலில் வழங்கப்படும் அரவணா பாயாசத்தில் தரமற்ற மற்றும் ஹலால் சான்றிதழ் பெற்ற வெல்லம் கலக்கப்பட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: 3 yrs before Tirupati laddu row, Sabarimala temple saw a storm over ‘halal jaggery’

முன்னதாக, 2019-20 ஆகிய ஆண்டுகளில் மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று, சபரிமலை கோயில் பிரசாதம் செய்வதற்கு தேவையான வெல்லத்தை விநியோகம் செய்தது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சபரிமலை கோயிலில் வழங்கப்படும் அரவணா பாயாசம், உன்னியப்பம் உள்ளிட்ட பிரசாதங்களில் ஹலால் சான்றிதழ் பெற்ற வெல்லம் பயன்படுத்தப்படுவதாகவும், இவை இந்து மத நெறிமுறைகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, கெட்டுப்போன பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொள்வதால், பக்தர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், மற்றொரு மதத்தின் நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் பெற்ற வெல்லத்தை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்துவதால், இந்து மதத்தின் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு சமரிமலை சிறப்பு ஆணையருக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டில் கேரள உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அதன்பேரில், பிரசாதத்தை பரிசோதனை செய்த ஆய்வறிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவு திருப்திகரமாக இருப்பதாகவும், அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவில், பிரசாதத்தின் மாதிரிகளில் சில பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரவணா பாயாசம் மற்றும் உன்னியப்பம் தயாரிக்க பாதுகாப்பற்ற வெல்லம் பயன்படுத்தப்படவில்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது.

மேலும், திருவிதாங்கூர் தெவசம் போர்டு சார்பில் ஏலத்தில் விடப்பட்ட வெல்லம், சதர்ன் அக்ரோ டெக் பிரைவெட் லிமிட்டட் என்ற நிறுவனம் சார்பில் ஏலம் எடுக்கப்பட்டதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, பிரசாதம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வெல்லத்தின் பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இடம்பெற்றிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு தரக்கட்டுப்பாடு வழிகாட்டுதலுக்கு எதிரான வகையில் ஹலால் முத்திரை இடம்பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் ஹலால் முத்திரை இடம்பெறுவது அவசியம் என, வெல்லம் விநியோகம் செய்த நிறுவனம் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. குறிப்பாக, ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருள்களில் கலப்படம் இல்லையெனவும், மிகுந்த சுகாதார அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும், அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு சபரிமலை கோயிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் மனுதாரர் மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, தெவசம் போர்டு வாதிட்டது. ஆனால், கோயில் பிரசாதத்தின் புனிதத்தன்மை குறித்து தெவசம் போர்டு கவலைகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டிய மனுதாரர், தெவசம் போர்டு தரப்பில் இருந்து வெல்லம் ஏலம் விடப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதற்கு, தரமற்ற வெல்லம் மட்டுமே ஏலத்தில் விடப்பட்டதாக தெவசம் போர்டு பதிலளித்தது. ஆனால், வெல்லத்தை ஏலத்தில் எடுத்த நிறுவனம், அதனை தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாக மனுதாரர் தனது வாதத்தில் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, ஹலால் என்பதற்கு மனுதாரரின் புரிதல் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு சில தருணங்களில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala Sabarimala Tirupati Kerala State kerala High court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment