லக்கிம்பூர் கெரியில் நேற்று (நவம்பர் 24) நடைபெற்ற இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் திறப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்றால், போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் எச்சரிக்கை விடுத்த நிலையில், அஜய் மிஸ்ரா விழாவில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார்.
பெல்ராயன், சம்பூர்ணா நகர் ஆகிய இரண்டு சர்க்கரை ஆலை திறப்பு விழாவிற்கு மிஸ்ரா சிறப்பு விருந்தினராக வருவதாக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இதற்கு முன்னதாக, டிஜிபி மற்றும் ஐஜி மாநாட்டின் இறுதி நாள் விழாவில் மிஸ்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை, லக்னோவில் நடந்த கிசான் மகாபஞ்சாயத்தில் விவசாயிகளிடம் பேசிய ராகேஷ் திகைத், மிஸ்ரா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், இரண்டு ஆலைகளுக்கும் கரும்பு எடுத்துச் செல்லப்படமாட்டாது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை லக்கிம்பூர் கெரியில் உள்ள DM அலுவலகத்தில் கொட்டுவார்கள் என எச்சரித்திருந்தார்.
பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தும், விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தவில்லை. விவசாயிகளின் கொலைக்கு காரணமான மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இரண்டு ஆலை நிகழ்ச்சிகளுக்கும் மிஸ்ராவுடன் பாஜக பாலியா எம்எல்ஏ ஹர்விந்தர் குமார் சாஹ்னி 'சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், "விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிப்பதில் மும்முரமாக இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. அன்று நான் பிஸியாக இருந்தேன்" என தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற லக்கிம்பூர் கெரி ஏடிஎம் சஞ்சய் குமார் கூறுகையில், " மிஸ்ரா வரமுடியாததால், மாவட்ட மாஜிஸ்திரேட் மகேந்திர பகதூர் சிங் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் அவராலும் வரமுடியவில்லை. அதன் காரணமாக, நான் கலந்துகொண்டேன். மிஸ்ரா வேறு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம். அதற்கான காரணத்தை அவரால் தான் சொல்ல முடியும்" என கூறினார்.
இதுதொடர்பாக மிஸ்ராவை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவரது தனி செயலாளர் அமித் மிஸ்ராவிடம் கேட்கையில், "ராஞ்சியில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் கூட்டம் இருந்தது. அதில், கலந்து கொண்டதால், சர்க்கரை ஆலை விழாவிற்கு அவரால் செல்ல முடியவில்லை" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil