Somya Lakhani
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னால், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை டைம் கேப்ஸ்யூல்-ஐ அல்லது ‘கால பத்திரத்தை’ வைப்பதற்கான திட்டங்கள் குறித்த தகவல்களும் மறுப்புகளும் வெளிவந்துள்ளன. அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபால் “கேப்ஸ்யூல் அயோத்தியைப் பற்றியும் பகவான் ராமர் மற்றும் அவரது பிறந்த இடம் பற்றிய செய்தியைக் கொண்டிருக்கும். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் பாதுகாக்கப்படும்” என்று கூறினார். அதே நேரத்தில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஆகஸ்ட் 5ம் தேதி டைம் கேப்ஸ்யூல் நிறுவப்படும் என்று வெளியான செய்திகளை நிராகரித்தார்.
‘டைம் கேப்ஸ்யூல்’ (Time Capsule) என்றால் என்ன?
டைம் கேஸ்ஸ்யூல் என்பது ஏதோ ஒரு அளவிலான, ஒரு வடித்தில் உள்ள கொள்கலன் ஆகும். இது தற்போதைய யுகத்தில் பொதுவான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றை வைத்து வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்காக நிலத்தடியில் புதைக்கப்படுகிறது.
டைம் கேஸ்ஸ்யூலுக்கு சிறப்பு பொறியியல் தேவைப்படுகிறது. அதனால், ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டாலும் அதில் உள்ள உள்ளடக்கங்கள் சிதைவடையாது. அலுமினியம் மற்றும் எஃகு போன்ற பொருட்கள் மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஆவணங்கள் பெரும்பாலும் அமிலம் இல்லாத காகிதத்தில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.
‘டைம் கேப்ஸ்யூல்’என்ற சொல் 20 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1777 ஆம் ஆண்டிற்கு முந்தைய உதாரணமாக வரலாற்றாசிரியர்கள், இயேசு கிறிஸ்துவின் சிலைக்குள் ஸ்பெயினில் உள்ள ஒரு தேவாலயத்தில் டிசம்பர் 2017 இல் மறுசீரமைப்பு பணிகளின் போது கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு 1990-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச டைம் கேப்ஸ்யூல் சொசைட்டி (ஐ.டி.சி.எஸ்) இப்போது செயலிழந்துவிட்டது. ஆனால், உலகில் டைம் கேப்ஸ்யூல்களின் எண்ணிக்கையை தொடர்ந்து மதிப்பிடுகிறது. அதனுடைய தரவுகளின்படி உலக அளவில் 10,000-15,000 வரை டைம் கேப்ஸ்யூல்கள் உள்ளன.
இந்தியாவில் ஏதேனும் டைம் கேப்ஸ்யூல்கள் உள்ளதா?
இதற்கு பல நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒரு டைம் கேப்ஸ்யூல் செங்கோட்டைக்கு வெளியே 1972-ல் பிரதமர் இந்திரா காந்தியால் நிலத்தடிக்குள் வைக்கப்பட்டது. அது அடுத்து வந்த அரசாங்கத்தால் தோண்டப்பட்டது. மற்ற டைம் கேப்ஸ்யூல்கள் மும்பையில் உள்ள ஒரு பள்ளியிலும் ஐ.ஐ.டி-கான்பூரிலும், ஜலந்தரில் உள்ள அழகான தொழில்முறை பல்கலைக்கழகத்திலும் காந்திநகரில் உள்ள மகாத்மா கோயிலிலும் உள்ளன.
செங்கோட்டை டைம் கேப்ஸ்யூல் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டப்பட வேண்டும். டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரக பணிபுரியும் வரலாற்றாசிரியர் பேராசிரியர் சலீல் மிஸ்ரா கூறுகையில், “1972-இல் இந்திரா காந்தி ஒரு களஞ்சியத்தை உருவாக்க முடிவு செய்தார். அவை உலோகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய, உருளை. அவை காலத்தின் பாதிப்புகளை தாங்கக்கூடியவை. அதன் உள்ளே, எழுதப்பட்ட பதிவுகள், தரவுகள் கலைப்பொருட்கள் இருந்தன. 1977 ஆம் ஆண்டில், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் டைம் கேப்ஸ்யூலைத் தோண்டி எடுத்தார்கள்.” என்று கூறினார்.
கேப்ஸ்யூல் வைக்கப்பட்டபோது, 22 வயதில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி இந்தி்யன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ஹிரென் முகர்ஜி, ஜோதிர்மோய் பாசு மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட அக்கால எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் வரலாற்று அம்சங்கள் அவருடனும் அல்லது அவரது குடும்பத்துடனும் தொடர்புடையவை மட்டுமே டைம் கேப்ஸ்யூலில் பாதுகாக்கப்படுகின்றன என்ற அச்சம். இதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயேயும் வெளியேயும் நிறைய எதிர்ப்புகள் இருந்தன. சுதந்திர இயக்கத்தில், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தனது குடும்பத்தின் பங்களிப்பை மட்டுமே பாதுகாத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது” என்று தியாகி கூறினார்.
டைம் கேப்ஸ்யூல் தோண்டப்பட்ட பின்னர் அதிலிருந்த உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
மற்ற டைம் கேப்ஸ்யூல்களில் என்ன பாதுகாக்கப்படுகிறது?
மார்ச் 6, 2010ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஐ.ஐ.டி கான்பூர் வளாகத்தில் டைம் கேப்ஸ்யூலை வைத்து புதைத்தார். நிறுவனத்தின் வான்வழி வரைபடம் 1961, 1984, 2008ம் ஆண்டுகளின் ஆண்டறிக்கைகள், விடுதியின் உணவுப் பட்டியல், நிறுவனத்தின் சின்னம், ஐ.ஐ.டி கான்பூரின் ஒரு வீடியோ டிவிடி, சில புகைப்படங்கள் மற்றும் சுனில் ஷான்பாக் நடத்திய நேர்காணல்களின் வாய்வழி பதிவுகள் ஆகியவை டைம் கேப்ஸ்யூல் உள்ளே உள்ளன.
ஐ.ஐ.டி கான்பூர் துணை இயக்குனர் மனிந்திர அகர்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “அனைத்து ஆவணங்களும் அமிலத்தால் அரிக்கப்படாத காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்தன… நிறைய தகவல்கள் பென் டிரைவ்கள், எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ்கள் கேப்ஸ்யூலில் வைக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆக்ஸிஜன் வெளியேற்றப்பட்டது. அதனால், எந்த சிதைவும் ஏற்படாது. அது பித்தளையால் ஆனது. அதனது உலோக உறை ஒரு அங்குல தடிமன் கொண்டது. எனவே எந்த ஆக்ஸிஜன் உள்ளே செல்லவில்லை. நிறுவனம் ஒரு நூற்றாண்டு நிறைவடையும் போது, கேப்ஸ்யூல் வெளியே எடுக்கப்படலாம் என்று நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால் இவை அனைத்தும் உண்மையில் மக்களைப் பொறுத்தது. ஏனென்றால் நம்மில் யாரும் சுற்றி இருக்கமாட்டோம்.” என்று கூறினார்.
மார்ச் 31, 2014 அன்று, 19 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மும்பையில் உள்ள அலெக்ஸாண்ட்ரா பெண்கள் ஆங்கில நிறுவனத்தில் எஃகு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டது. பள்ளி சீருடை, முதல் ஆண்டறிக்கை, பள்ளி நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்ட யூ.எஸ்.பி-களைத் தவிர, டைம் கேப்ஸ்யூலில் மாணவர்கள் மற்றும் முதல்வர் ஃப்ரெனி மேத்தா எழுதிய விலைமதிப்பற்ற கடிதங்களும் உள்ளன. அவை வருங்கால மாணவர்களுக்கு உரையாற்றப்பட்டவை. மேலும், அது மாணவர்களின் வாழ்க்கையில் நூலகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. டைம் கேப்ஸ்யூல் செப்டம்பர் 1, 2062 அன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது.
ஜனவரி 2019 இல், இந்தியாவில் நவீனகால தொழில்நுட்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பொருட்களைக் கொண்ட ஒரு சதுர டைம் கேப்ஸ்யூல் ஜலந்தரின் அழகான தொழில்முறை பல்கலைக்கழகத்தில் புதைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற அவ்ரம் ஹெர்ஷ்கோ (உயிரி வேதியியலாளர்), எஃப் டன்கன் எம் ஹால்டேன் (இயற்பியலாளர்) மற்றும் தாமஸ் கிறிஸ்டியன் சுதோவ் (உயிரி வேதியியலாளர்) ஆகியோரின் படங்கள் 10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இது 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட வேண்டும். இது குறித்து எல்பியு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “லேண்ட்லைன் தொலைபேசி, ஸ்மார்ட்போன், எடை மெஷின், வாட்டர் பம்ப், ஸ்டாப்-வாட்ச், ஹெட்ஃபோன், ஒரு ஹேண்டி கேம் மற்றும் பென் டிரைவ் போன்ற பொருட்கள் அந்த கேப்ஸ்யூலுக்குள் உள்ளன.” என்று தெரிவித்தார்.
டைம் கேப்ஸ்யூல்கள் எந்த அளவுக்கு முக்கியமானவை?
வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் இந்த யோசனையை உள்நோக்கம் கொண்டவை என்று விமர்சிக்கிறார்கள். இது குறித்து பேராசிரியர் மிஸ்ரா கூறுகையில், “இந்த நடைமுறை தவிர்க்க முடியாத ஒரு அகநிலை நடைமுறையாகும். இது உண்மையான வரலாற்றுப் படத்தை உருவாக்காமல் அவற்றை புகழ உதவுகிறது. அனைத்து வரலாற்றாசிரியர்களும் இந்த டைம் கேப்ஸ்யூல் நடைமுறையை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இது சரியான வரலாற்று முறை அல்ல. என்ன விஷயத்தை, கலைப் பொருட்களை, எழுதப்பட்ட ஆவணங்களை உள்ளே வைக்கப் போகிறார்கள் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்.” என்று கேள்வி எழுப்பினார்.
வரலாற்றாசிரியர் ஆதித்ய முகர்ஜி கூறுகையில், “கடந்த கால மன்னர்களும் ராணிகளும் தங்களுடைய முழு கதைகளையும் அரசவை உறுப்பினர்களால் எழுதப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளவில்லை. அதைச் சரிபார்க்க பிற ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும். டைம் கேப்ஸ்யூல் எல்லாம் உருவாக்க வேண்டும் என்றால் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது மிகவும் விவேகமானதாக இருக்கும்” என்று கூறினார்.
ஜே.என்.யு.வின் அரசியல் விஞ்ஞானி சோயா ஹசன், பேராசிரியர் எமரிடா கூறுகையில், “வரலாற்று ஆய்வுகள் விமர்சன ரீதியாக ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றார். “மதிப்புமிக்க எந்த வரலாற்றாசிரியரும் வரலாற்றை எழுத ஒரு கேப்ஸ்யூலை நம்ப மாட்டார்கள். ஆனால், அரசியல் செய்தி வரலாற்று செயல்பாடாகவும் கல்வி ஆராய்ச்சி என்று அழைக்கப்படும்போது ஆதராங்களையும் உண்மைகளையும் பற்றி யாருக்கு அக்கறை” என்று அவர் கூறினார்.
மேலும், மிஸ்ரா கூறுகையில், “வருங்கால தலைமுறை வரலாற்றாசிரியர்கள் நம்முடைய காலத்தை மறு கட்டமைப்பதற்காக அனைத்து வகையான தரவுகளையும் பதிவுகளையும் கண்டுபிடிக்கப் போகிறார்கள். எனவே, ஒரு நூற்றாண்டு வரலாற்றாசிரியர்கள் ராம ஜென்ம பூமி இயக்கம் பற்றி எழுத விரும்பினால், செய்தித்தாள் மற்றும் பிற எழுதப்பட்ட பதிவுகளில் போதுமான தரவுகள் இருக்கும்.... அதனால், இதைப் பற்றி யாரும் பாதுகாக்கப்பட்ட பதிவை செயற்கையாக உருவாக்கத் தேவையில்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.