திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் தேவை என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒன்று பெருமாள், மற்றொன்று லட்டு. வேறெங்கும் இல்லாத அளவிற்கு அவ்வளவு தரமானதாகவும், சுவையானதாகவும் திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 6 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.21,139 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்: பிரசாதம் தயாரிப்பதில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனை தற்போது சர்ச்சையாகியுள்ளது. திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவது நியாயமில்லை என்று இடதுசாரித் தலைவர்கள் வீடியோ வெளியிட்டதால் இப்பிரச்சனை பெரிதானது. ராமானுஜாச்சாரியார் திருமலை கோயில் அமைப்பை சாதிக்கு அப்பால் வழிநடத்தினார். தற்போது, அது போல் அல்லாமல், திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்ட சாதியினருக்கு பிரசாதம் தயாரிக்கும் பணியை வழங்க வேண்டும் என்று அறிவித்தது நியாயமானது அல்ல என்று சி.ஐ.டி.யு தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் பிரசாதம் தயாரித்து, மற்ற பிராமணர்கள் அதை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் தலித்துகள் தான் கனரக பிரசாதத் தட்டுகளை கோயில் வாசலில் இருந்து வாகனங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பிரசாதம் எடுத்துச் செல்வதற்கு மட்டும் தலித்துகளை பயன்படுத்தும்போது, லட்டு தயாரிப்பதற்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேநேரம், கோயில் சமையலறையில் பிரசாதம் தயாரிப்பது ஸ்ரீ வைஷ்ணவர்கள். பிரசாதம் தயாரிப்பது வைகானசா சாதியைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இல்லாதபோது, அல்லது கிடைக்காதபோது ஸ்ரீவைஷ்ணவர்களை அந்தப்பணியில் அமர்த்தலாம் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது, என்று கோவில் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“