திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் நேற்று வியாழக்கிழமை வெளியாகியது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பதாகவும், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மற்றும் வெள்ளம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் திசை திருப்புவதற்காக சந்திரபாபு நாயுடு லட்டு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.காங்.கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், "திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே எங்கள் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டுகிறார். கடவுளின் பெயரால் அவர் அரசியல் செய்கிறார். இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?
திறன் மேம்பாட்டு கழக முறைகேடு வழக்கில் கைது செய்ததற்காக பழிவாங்குகிறார் சந்திரபாபு நாயுடு. அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதைகள். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தேசிய அளவிலான அங்கீகாரம் வாங்கும் நிறுவனங்களிடமிருந்தே நெய் கொள்முதல் செய்யப்பட்டது. எங்களது ஆட்சியில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யவில்லை. மாமிச கொழுப்பு கலந்ததாக பொய் கூறுவது நியாயமா?
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். தர்மத்துக்கு எதிரான செயல்பாடுகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகளை போடுவதையே முதன்மையானதாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவர் அனைத்து விசயங்களையும் திசை திருப்புகிறார். அரசியலுக்காக கடவுளின் பெயரை அவர் பயன்படுத்துவது கீழ்த்தரமானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாயு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“