மத்திய புலனாய்வு அமைப்பான (சி.பி.ஐ) இயக்குனரால் கண்காணிக்கப்படும் புதிய "சுயாதீனமான" சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி), முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசில் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில் விநியோகிக்கப்படும் லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Tirupati laddu row: Supreme Court orders CBI-monitored SIT probe, says ‘won’t allow court to be used as political battleground’
புதிய எஸ்.ஐ.டி குழுவில் சி.பி.ஐ மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த தலா 2 அதிகாரிகளும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) மூத்த அதிகாரி ஒருவரும் இடம் பெறுவார்கள் என்று நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு தெரிவித்துள்ளது.
“சி.பி.ஐ இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்படுவது பொருத்தமாக இருக்கும்... எனவே பின்வரும் வழிகாட்டுதலின்படி இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மாநில அரசால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி கீழ்க்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.ஐ இயக்குநரால் பரிந்துரைக்கப்பட்ட சி.பி.ஐ-யின் இரண்டு அதிகாரிகள், ஆந்திரப் பிரதேச அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையின் இரண்டு அதிகாரிகள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்,எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட மூத்த அதிகாரி ஒருவர்” என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர்.
புதிய எஸ்.ஐ.டி-யின் விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுக்களில் அல்லது பிரதிவாதியின் நிலைப்பாட்டில் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கு செல்லவில்லை என்று தெளிவுபடுத்தியது. “நீதிமன்றத்தை ஒரு அரசியல் போர்க்களமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இருப்பினும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைத் தணிக்க, சுதந்திரமான எஸ்.ஐ.டி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பார்க்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) தலைமையிலான அரசாங்கம் திருப்பதி லட்டுவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தூய்மை குறித்து சந்தேகம் எழுப்பியதால் சர்ச்சை தொடங்கியது. திருப்பதி கோயில் பக்தர்களுக்கு தினமும் வினியோகம் செய்வதற்கு முன்பு கடவுளுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகள் மற்றும் காய்கறிகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வக அறிக்கைகளை பொதுவில் வெளியிட்டார்.
செப்டம்பர் 30-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசின் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை சுதந்திரமான விசாரனை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டது.
துஷார் மேத்தா வெள்ளிகிழமை நீதிமன்ற அமர்விடம் கூறினார், “நான் பிரச்சினையை ஆய்வு செய்தேன். ஒன்று மிகத் தெளிவாக உள்ளது. இந்த குற்றச்சாட்டில் உண்மையின் கூறு ஏதேனும் இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது... பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். உணவுப் பாதுகாப்புச் சட்டமும் சம்பந்தப்பட்டது... எஸ்.ஐ.டி உறுப்பினர்களுக்கு எதிராக நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்யத் தகுதியும் திறனும் உடையவர்கள். எஸ்.ஐ.டி உறுப்பினர்களை விட மூத்த மத்திய அரசின் காவல்துறையின் சில மூத்த அதிகாரி அவர்களைக் கண்காணிக்கட்டும். அகில இந்தியக் கண்ணோட்டம் இருக்கும்... அது நம்பிக்கையைத் தூண்டும், விசாரணை தொடரும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“