Advertisment

திருப்பதி லட்டு சர்ச்சை: சந்திரபாபுவுக்கு கோவில் வாரியம் ஆதரவு; பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்; எடைபோடும் மத்திய அரசு

திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக பேசிய 'சந்திரபாபு கடவுளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார். மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்தக் கதை புனையப்பட்டுள்ளது' என்று ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார்.

author-image
WebDesk
New Update
Tirupati laddu war Temple board backs Chandrababu Naidu Jagan Mohan Reddy hits back Centre weighs in too Tamil News

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலரான ஜே. சியாமளா ராவ், 'இவ்வளவு குறைந்த விலையில் நெய் வழங்குவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களை முந்தைய அரசாங்கம் தடுத்து இருந்திருக்க வேண்டும்' என்று கூறினார்.

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவரது குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், 'சந்திரபாபு கடவுளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார்' என்று ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார். 

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக முழு அறிக்கை கேட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்திருந்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Tirupati laddu war: Temple board backs Chandrababu Naidu, Jagan Mohan Reddy hits back, Centre weighs in too

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "நெய் சப்ளையரை மாற்றியுள்ளோம். மக்கள் தங்கள் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். உணர்வுகள் புண்படுத்தப்படும்போது, ​​மன்னிக்க முடியாத தவறுகள் நடந்தால், அதற்கு பொறுப்பானவர்களை நான் விட்டுவிட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “இது திசைதிருப்பும் அரசியல். சந்திரபாபு நாயுடுவின் நூறு நாள் ஆட்சியில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்களின் 'சூப்பர் சிக்ஸ்' (தேர்தல் வாக்குறுதிகள்) என்ன ஆனது என்று கேட்கிறார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்தக் கதை புனையப்பட்டுள்ளது." என்று கூறினார். 

இதற்கிடையில், செய்தி அறிக்கைகள் மூலம் இந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாகவும், உடனடியாக சந்திரபாபு நாயுடுவை அணுகி, இந்த விவகாரம் தொடர்பான முழு அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும், வெள்ளிக்கிழமையே மாநிலத்திடம் இருந்து அறிக்கையைப் பெறுவதாகவும், நடவடிக்கை தேவைப்பட்டால் மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கூறினார்.

இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சை தொடர்பாக பேசிய திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) செயல் அலுவலரான ஜே. சியாமளா ராவ், 'இவ்வளவு குறைந்த விலையில் நெய் வழங்குவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களை முந்தைய அரசாங்கம் தடுத்து இருந்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜூலை 6 மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் நான்கு நெய் மாதிரிகள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு (NDDB CALF) அனுப்பப்பட்டன. இந்த நான்குமே திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் மூலம் சப்ளை செய்யப்பட்டது. அவை நான்கு டேங்கர்களில் வந்தது. 

முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நெய் வழங்குவதற்கான டெண்டரை வெளியிட்டது. அது மே 8 அன்று வழங்கப்பட்டு, மே 15 முதல் விநியோகம் தொடங்கியது.

கடந்த ஆண்டு ஜூலையில், கர்நாடகா பால் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, அதற்கு பதிலாக மின்-டெண்டர்களுக்குப் பிறகு மற்ற சப்ளையர்களைத் தேர்வு செய்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ ஆட்சிக்கு வந்த பிறகு, ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் நந்தினி பிராண்ட் நெய்யை வழங்க கர்நாடக பால் கூட்டமைப்புடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தது. 

ஜூலை 6 ஆம் தேதியும், ஜூலை 12 ஆம் தேதியும் வந்த இரண்டு டேங்கர்களில் நெய்யின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அது நெய் போல் இருந்தது. ஆனால் அது நெய் இல்லை. உடனடியாக, அனைத்து பொருட்களும் நிறுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திடம் கலப்பட சோதனை ஆய்வகம் இல்லை, மேலும் மாதிரிகள் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அதனால், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள ஆய்வகத்தில் நான்கு மாதிரிகளை சோதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு விலங்கு கொழுப்பு இருப்பதை வெளிப்படுத்தியது. 

சுத்தமான பசு நெய் ஒரு கிலோ 320 ரூபாய்க்கு வழங்க முடியாது. இது சாத்தியமான விலை அல்ல. நெய்யின் தரம் பாதிக்கப்படும் என்பதால், குறைந்த விலைக்கு வாங்குவதை தவிர்த்து இருந்திருக்க வேண்டும். புதிய அரசு பதவியேற்றதும், செயல் அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டதும், லட்டுகளின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து முதல்வர் கவலை தெரிவித்தார். தர சோதனையில் தவறினால், நெய் சப்ளையர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தோம். சப்ளையர்களில், ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் வழங்கும் நெய் தரமற்றது என கண்டறியப்பட்டதால், மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பினோம். இப்போது அந்த நிறுவனம் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, திருப்பதி தேவஸ்தானம்  தனது சொந்த கலப்பட சோதனை ஆய்வகத்தை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் திருப்பதி தேவஸ்தானம் ஆய்வகங்களுக்கு வெளியே நெய் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. எங்களின் ஆய்வகங்கள் வாங்கப்படும் பொருட்களில் உள்ள மற்ற அளவுருக்களை சோதிக்கின்றன, ஆனால் கலப்பட சோதனை கருவிகள் இல்லை. மே மாதத்தில் மொத்தம் ஐந்து சப்ளையர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன, மேலும் ஒருவர் மட்டுமே சோதனையில் தோல்வியடைந்தார்." என்று அவர் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் பேசுகையில், ஏற்கனவே ஒரு கிலோ நெய்யை 400 ரூபாய்க்கு விற்பதாகவும், ஏதேனும் ஒரு நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தால், தரத்தில் சமரசம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.

தமிழகத்தின் திண்டுக்கல்லில் செயல்பட்டும் வரும் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சை தொடர்பான அனைத்து கருத்துக்களையும் மறுத்துள்ளது. 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்யும் பல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. முதலில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆய்வக சோதனை அறிக்கை, நெய் மாதிரி ஏ.ஆர் டைரியில் இருந்து வந்தது என்று கூறவில்லை. தவறான பாசிட்டிவ் முடிவுகள் வர வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாங்கள் வழங்கிய நெய் டேங்கர்களை சோதனை அறிக்கைகள் திருப்திப்படுத்திய பின்னரே திருப்பதி தேவஸ்தானம் ஏற்றுக்கொண்டது. 

திருப்பதி தேவஸ்தானம் விற்பனையாளர்களை மாற்றியதால் ஜூலைக்குப் பிறகு சப்ளை செய்வதை நிறுத்திவிட்டோம். மாட்டுத் தீவனம் உட்பட நெய்யில் வெளிநாட்டுக் கொழுப்பின் தடயங்கள் காணப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்த நெய் மாதிரி ஏ.ஆர் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து வரக்கூடாது, அதுதான் எங்களின் நிலைப்பாடு." என்று ஏ.ஆர் டெய்ரி ஃபுட் தரக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமண ரெட்டி வெள்ளிக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மிகக் குறைந்த ஏலதாரருக்கு வழங்கியது. ஒரு கிலோவுக்கு 320 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல தரமான தூய நெய்யின் சந்தை விலை கிலோவுக்கு ரூ.900 ஆக இருக்கும் போது, ​​அந்த விகிதத்தில் சுத்தமான மற்றும் கலப்படமற்ற நெய்யை வழங்க முடியாது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கம் இவ்வளவு குறைந்த ஏலத்திற்குச் சென்று நெய்யின் தரத்தில் சமரசம் செய்தது. 

 கர்நாடகா பால் கூட்டமைப்பு இப்போது நெய்யை ஒரு கிலோவுக்கு 475 ரூபாய்க்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது, இருப்பினும் அது நஷ்டம் அடையும். திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் நந்தினி நெய்யின் பிராண்ட் மதிப்பின் அதிகரிப்பு காரணமாக விற்பனையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அவர்கள் மீட்டெடுப்பார்கள் என்பது  கர்நாடகா பால் கூட்டமைப்பின் புரிதல்" என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tirupati Chandrababu Naidu Andhra Pradesh Jagan Mohan Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment