திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக எழுந்த விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்புக்காக அனுப்பி வைக்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய்யை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நிறுவனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டன. மேலும் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெய் பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரும் நாளை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.