திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்காக டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகாதசியின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்களில் வைகுண்ட துவாரம் என்று அழைக்கப்படக் கூடிய சொர்க்க வாசல் திறந்தே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், ஜனவரி 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட், ஜனவரி 9-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்தது. இதற்காக 8 இடங்களில் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கவுன்டர்களில் இன்று (ஜன 8) மதிய நேரத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்து வந்தனர். விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதாக தெரிகிறது. இதனால், பக்தர்கள் இடையே கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த விபத்தில், சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த துக்க நிகழ்விற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.