திருப்பதி கோவிலில் சடங்குகளை நடத்துவதில் "தவறான மற்றும் ஒழுங்கற்ற நடைமுறை" பின்பற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பக்தரின் மனுவை நிராகரித்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், அரசியலமைப்பு நீதிமன்றமானது ஒரு கோவிலின் அன்றாட விவகாரங்களை கவனிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த தள்ளுபடி உத்தரவால், கோயில் நிர்வாகம் தனது பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியது. மேலும் எட்டு வாரங்களுக்குள் மேல்முறையீட்டிற்கு உரிய பதிலை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கோயில் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டது. அதேநேரம் வேறு ஏதேனும் குறை இருந்தால் உரிய அமைப்பை மனுதாரர் அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
“இந்த நீதிமன்றம் இதை ஒரு ரிட் மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது. பூஜை தவிர, கோயில் நிர்வாகம் விதிகள் மற்றும் விதிமுறைகளை புறக்கணித்தால் அல்லது வேறு ஏதேனும் ஏற்பாடுகளை மீறினால், மனுதாரர் அல்லது வேறு எந்த பக்தர் எழுப்பும் பிரச்சினைகளை நாங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் (TTD) கேள்வி எழுப்ப முடியும். இதைத் தவிர, நாங்கள் சேவைகளில் தலையிட ஆரம்பித்தால், அது சாத்தியமாக இருக்காது,” என்று பெஞ்ச் கூறியது.
வழக்கு தொடர்ந்த ஸ்ரீவாரி தாதா, ‘அபிஷேகம்’ முறையை மரபுகளின்படி பின்பற்ற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 2020 மார்ச் மாதத்திற்கான மனுதாரின் கோரிக்கை தேவஸ்தானத்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்று நீதிபதி கோஹ்லி கேட்டார். மேலும், ஸ்ரீவாரி தாதாவின் புகார் குறித்து தேவஸ்தானம் ஏன் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “அதை தெளிவுபடுத்துவது உங்கள் கடமை. நீங்கள் உங்கள் பொறுப்பை மறுக்க முடியாது, ”என்று நீதிமன்றம் கூறியது.
திருப்பதி தேவஸ்தானம் தரப்பு வழக்கறிஞர், மனுதாரரின் ஒவ்வொரு குறைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர் பிரமாணப் பத்திரத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால் தலைமை நீதிபதி ரமணா, “ஏதோ தவறு இருக்கிறது, சடங்குகள் மரபுகளின்படி நடக்கின்றன என்று நீங்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் உத்தரவிட வேண்டி வரும்” என்றார்.
அதேநேரம், பூஜை நடத்துவது போன்ற அன்றாட நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மனுதாரரான ஸ்ரீவாரி தாதாவிடம் கூறியது.
ஸ்ரீவாரி தாதா முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார், இருப்பினும், ஜனவரி 5 ஆம் தேதி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அப்போது, "சடங்குகளை நடத்துவது தொடர்பான நடைமுறைகள் தேவஸ்தானத்தின் முடிவுகளுக்கு உட்பட்டது. அந்த நடைமுறைகள் மற்றவர்களின் மதச்சார்பற்ற அல்லது சிவில் உரிமைகளை பாதிக்காத வரை, அவை நீதிமன்றத்தில் தீர்க்கும் விஷயமாக இருக்க முடியாது" என்று உயர் நீதிமன்றம் கூறியது. சடங்குகளை நடத்தும் விஷயத்தில் தேவஸ்தானம் பொதுக் கடமைகளை நிறைவேற்றுவதாகக் கூற முடியாது, எனவே, ஒரு தேவஸ்தானத்தின் எல்லைக்குள் வரும் இத்தகைய நடவடிக்கைகள் வெளியாரின் உத்தரவின் பேரில் அதிகார வரம்பிற்கு ஏற்றது அல்ல என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil