/indian-express-tamil/media/media_files/2025/09/24/ttd-tirupati-2025-09-24-14-04-37.jpg)
திருப்பதி கோவிலில் இருந்து நூறு கோடி ரூபாய் "திருட" ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உதவியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. Photograph: (TTD)
ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், செப்டம்பர் 20-ம் தேதி சமூக வலைத்தளத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டார். அதில், கோவில் உண்டியல் (பராக்காமணி) பணத்தை, பணியாளர் ஒருவர் திருடுவதாகக் காட்சிகள் இருந்தன. இது, தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க, மற்றும் ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த விவகாரம் பேசுபொருளானது.
இதற்குப் பதிலடியாக, ஆந்திர அரசு இந்த மோசடி குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இந்த விவகாரம் முதன்முதலில் ஏப்ரல் 2023-ல், ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இருந்தபோது, தற்காலிகப் பணியாளர் ரவி குமார், உண்டியலில் இருந்து 100 டாலர் நோட்டுகளைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
“ஜெகன்மோகன் ரெட்டியின் ஐந்து ஆண்டு ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருந்தது. அவர்கள் ஏழுமலையானைக்கூட விட்டுவைக்கவில்லை. முன்னாள் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டியின் ஆசீர்வாதத்துடன் உண்டியலில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் திருடப்பட்டது. இந்த பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டது. கருணாகர் ரெட்டி தலைவராக இருந்தபோது ரவி குமார் கோடிக்கணக்கில் திருடினார். இந்த வழக்கை லோக் அதாலத் மூலம் சரி செய்யவும் முயற்சி நடந்தது. இப்போது உண்டியல் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. விரைவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் குற்றங்கள் வெளிவரும்” என்று லோகேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதால், இதை அரசியலாக்க முடியாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) தெரிவித்துள்ளது. “அப்போது இருந்த தேவஸ்தான நிர்வாகத்தின் நடைமுறை குளறுபடிகள் தான் இதற்கு காரணம். ரவி குமார் மீதான வழக்கு சமாதானத்திற்கு உரியதல்ல. அப்படி இருக்கும்போது லோக் அதாலத் மூலம் இந்த வழக்கை ஏன் சரி செய்ய முயற்சி நடந்தது? அப்போதைய உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைமை இந்த திருட்டில் ஆதாயம் பெற்றுள்ளனர்” என்று பா.ஜ.க. தலைவர் மற்றும் தேவஸ்தான உறுப்பினர் ஜி. பானு பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் மடிலா குருமூர்த்தி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத இந்த குற்றச்சாட்டுகள், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என ஒய்.எஸ்.ஆர்.சி.பி. சாடியுள்ளது. இது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு எழுதிய கடிதத்தில், “ஆந்திராவில் தற்போது நடப்பது மதத்தை அரசியல் பழிவாங்கலுக்கான கருவியாகப் பயன்படுத்துவது. இது பொது அமைதியை சீர்குலைப்பதுடன், மக்களுக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் உள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. சி.பி.ஐ மூலம் மட்டுமே நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணை சாத்தியமாகும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.