/indian-express-tamil/media/media_files/2025/06/06/t4ngjOMrU6bJhFNvN7Ak.jpg)
உலகைச் சுற்றி பயணிக்க தேவையில்லை; தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை; அமெரிக்காவில் 'திருப்பதி லட்டு' பெற, ஈ-காமர்ஸ் இணையதளமான புஷ்மைகார்ட் (PushMyCart) தளத்தில் உள்நுழைந்து ஆர்டர் செய்தால் போதும் என்ற நிலை இருந்தது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டெக்சாஸை மையமாக கொண்ட மஹிதா எல்எல்சி (Mahita LLC) என்ற புஷ்மைகார்ட் நிறுவனத்தின் உரிமையாளர், 'திருப்பதி லட்டு'வை அனுமதியின்றி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை கண்டித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது, 'திருப்பதி லட்டு'வின் புனிதம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.
திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), தனது பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீட்டை (GI) மீறி, 'திருப்பதி லட்டு' என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்த அல்லது விளம்பரப்படுத்திய பல அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
'திருப்பதி லட்டு' என்ற பெயரை அங்கீகரிக்கப்படாத வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதற்காகவும், தங்கள் பொருட்களை கோயிலுடன் தவறாக தொடர்புபடுத்தியதற்காகவும் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக TTD இன்று (ஜூன் 6) தெரிவித்தது. புஷ்மைகார்ட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸின் நகல், அந்த தளம் புவிசார் குறியீட்டை எவ்வாறு அங்கீகரிக்காமல் பயன்படுத்தியது என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது, அந்த தளம் TTD ஐ ஒரு "விற்பனையாளர்" என்று பட்டியலிட்டு தங்களை தேவஸ்தானத்துடன் இணைத்துக் கொண்டிருந்தது.
மேலும் அந்த நோட்டீஸில், "பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீட்டை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது, உங்கள் தயாரிப்பு விளக்கம் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கம் மூலம் உருவாக்கப்பட்ட தவறான தொடர்பு, திருப்பதி லட்டு மீதான TTD-இன் உரிமைகளை மீறும் ஒரு நேர்மையற்ற நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லட்டுகளுடன் இணைக்கப்பட்ட கேள்வி - பதில் பிரிவில், புஷ்மைகார்ட் தளம், "ஆம், திருப்பதி பாலாஜி பக்தர்கள் திருப்பதி லட்டுகளை ஆன்லைனில் வாங்க விரும்புகிறார்கள். அது இப்போது புஷ்மைகார்ட்டில் கிடைக்கிறது" என்று உறுதியளித்திருந்தது. மேலும், "புஷ்மைகார்ட், திருமலை திருப்பதி லட்டு பிரசாதத்தை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அனுப்புகிறது" என்றும் கேள்வி - பதில் பிரிவு கூறியுள்ளது.
சட்ட ரீதியாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் படி, சில லட்டுகள் பக்தர்களால் கோயிலிலிருந்து பிரசாதமாகப் பெறப்பட்டிருக்கலாம். எந்த மூன்றாம் தரப்பினரும் பிரசாதத்தை வணிக நோக்கங்களுக்காக விற்பது "சட்டவிரோதமானது" என்று சுட்டிக்காட்டியது. ஒரு வருடத்தில் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் எத்தனை லட்டுகள் விற்கப்படுகின்றன என்பதை TTD வெளியிடவில்லை.
இருப்பினும், திருப்பதி லட்டு 1999 ஆம் ஆண்டு புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு புவிசார் குறியீடு என்பதை நோட்டீஸ் எடுத்துக்காட்டியது. "லட்டு தயாரிப்பு TTD இன் மேற்பார்வையில், காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. மேலும், புனிதப்படுத்தப்பட்ட செயல்முறைப்படி திருமலை கோயிலுக்குள்ளேயே பிரத்தியேகமாக செய்யப்படுகிறது. இப்பெயரை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதும், விற்பதும் சட்ட உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், பிரசாதத்தின் ஆன்மிகப் புனிதத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று TTD கூறியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நோட்டீஸ் பெற்றதை புஷ்மைகார்ட் ஒப்புக்கொண்டு, சட்ட மறுபரிசீலனை நிலுவையில் உள்ளதால் அதன் தயாரிப்பு பட்டியல்களை நிறுத்தி வைத்தது. TTD இன் முன்கூட்டிய அணுகலுக்குப் பிறகு பல விற்பனையாளர்களும் தங்கள் பட்டியல்களை நீக்கிவிட்டனர்.
TTD செயல் அதிகாரி ஜே. சியாமள ராவ் கூறுகையில், 'திருப்பதி லட்டு' என்பது வெறும் ஒரு தயாரிப்பு மட்டுமல்ல, "ஆழமான ஆன்மிக மற்றும் கலாசார மதிப்பைக் கொண்ட ஒரு புனிதமான பிரசாதம்" என்றார்.
"அதன் தவறான பயன்பாட்டை தடுக்கவும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கவும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
கோயில் மரபுகளின் நம்பகத்தன்மையையும், புனிதத்தையும் பாதுகாக்க இதுபோன்ற மீறல்களை TTD தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.