திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவு 9.30 மணிக்கு நடைபாதை மூடகப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில், நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில், காணிக்கையாக சொத்துக்ளை எழுதி வைப்பது என பலரும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதேபோல் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள், மலைக்கு பேருந்தில் செல்லும் வசதிகள் இருந்தாலும் பக்தர்கள் பலரும் நடந்து செல்லும் பாதையிலும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபிரியில் இருந்து நடைபாதையின் 7வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை நடைபாதையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில், வழக்கம்போல் தனியாகவோ, குழுவாகவோ பக்தர்கள் நடை பாதையில் பயணம் செய்யலாம்.
பிற்பகல் 2 மணிக்கு பிறகு, பக்தர்கள் 70 முதல் 100 பேர் கொண்ட குழுக்கலாக நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை. இதற்கு முன்பாக, அலிபிரி நடைபாதை இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த நிலையில், தற்போது அரைமணி நேரம் முன்னதாக,இரவு 9.30 மணிக்கே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நடைபாதையில் பயணம் செய்யும்போது, விஜிலென்ஸ் குழு கண்காணித்து அவர்களை கண்கானித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்கானித்து வரும் வனத்துறை ஊழியர்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு முன்னதாக, பக்தர்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.