லட்டுகளில் கலப்படம் இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் கூறியதைத் தொடர்ந்து திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது.
ஆங்கிலத்தில் படிக்க: At Tirupati temple, footfall dipped after laddu allegations, but bounced back soon
செப்டம்பர் 18-ம் தேதி வெங்கடேசப் பெருமானை தரிசனம் செய்ய சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 78,690 ஆக இருந்தது. அன்று மாலை, ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, அமராவதியில் நடந்த என்.டி.ஏ., சட்டமன்றக் கூட்டத்தில் பேசுகையில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சி, லட்டு தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
செப்டம்பர் 19-ம் தேதி குற்றச்சாட்டு வெடித்தபோது, பக்தர்களின் எண்ணிக்கை 68,835 ஆக இருந்தது. இருப்பினும், செப்டம்பர் 20-ம் தேதி வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை 73,104 ஆக இருந்தது; செப்டம்பர் 21-ம் தேதி வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை 82,406 ஆக இருந்தது; செப்டம்பர் 22-ம் தேதி 82,646 பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) செப்டம்பர் 23-ம் தேதி கோயிலை தோஷம் போக்கும் புனிதப்படுத்தும் பரிகாரம் நடத்தப்படும் என்று அறிவித்தபோது பக்தர்களின் வருகை எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டது. அன்று 65,604 பக்தர்கள் தரிசனம் செய்தனர். “தீய விளைவுகளைத் தடுக்கவும், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுக்கவும்” கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புனிதப்படுத்தும் சடங்குகள் செய்யப்பட்டன என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நெய் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் தொட்டிகளிலும், லட்டு மற்றும் இதர பிரசாதங்களைத் தயாரிப்பதற்குச் செல்லும் மற்ற பொருட்கள் வைக்கப்படும் சேமிப்புப் பகுதியிலும், சமையலறை மற்றும் பிரசாதங்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் தட்டுகளிலும் பரிகாரங்கள் செய்யப்பட்டன.
“சாமி தரிசனம் செய்த பிறகு, பக்தர்கள் தங்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் லட்டுகளை வாங்க கவுண்ட்டர்களுக்குச் செல்வது வழக்கம். கலப்பட நெய் குறித்து அச்சங்கள் இருந்தாலும், லட்டுகளின் புனிதத்தன்மை மற்றும் தரத்தை மீட்டெடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் உடனடி நடவடிக்கை எடுத்தது, அதனால் அதன் விற்பனை பாதிக்கப்படவில்லை” என்று செவ்வாய்க்கிழமை கோவிலுக்குச் சென்று லட்டு மற்றும் பிற பிரசாதங்களை ருசித்த அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி கூறினார். மேலும், லட்டுகளை வாங்கிய பக்தர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் பெற்றார்.
கோவிலுக்கு பக்தர்களின் வருகை
செப்டம்பர் 9 - 67,030
செப்டம்பர் 10 - 62,380
செப்டம்பர் 11 - 67,668
செப்டம்பர் 12 - 63,544
செப்டம்பர் 13 - 60,694
செப்டம்பர் 14 - 80,735
செப்டம்பர் 15 - 85,626
செப்டம்பர் 16 - 76,200
செப்டம்பர் 17 - 72072
செப்டம்பர் 18 (முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாள்) 78,690
செப்டம்பர் 19 (லட்டு சர்ச்சை வெடித்தது) 68,835
செப்டம்பர் 20 - 73,104
செப்டம்பர் 21 - 82,406
செப்டம்பர் 22 - 82,646
செப்டம்பர் 23 - (புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது) 65,604
கடந்த சில நாட்களாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒரு நாளுக்கு 3.25 கோடி ரூபாய் முதல் 4.96 கோடி ரூபாய் வரை உண்டியில் காணிக்கையாகக் கிடைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“