திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருலை திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித, தோமலா உள்ளிட்ட சேவைகள் மூலமும் இலவச தரிசனம் மூலமாகவும், பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்கிற திவ்ய தரிசனம் மற்றும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு சுற்றுலா பேக்கேஜ்களை அளிக்கிறது. அதே போல, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னையிலிருந்து கீழ் திருப்பதி சென்று, அங்கிருந்து திருமலைக்கு சென்று தரிசனம், உணவு , மீண்டும் சென்னைக்கு ரிட்டர்ன் என தினமும் பக்தர்களை அழைத்து செல்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி, தமிழ்நடு சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் ஆகியவை சுற்றுலா பேக்கேஜில் திருப்பதிக்கு புக் செய்யும் பக்தர்களின் தரிசனத்துக்காக ரூ 300 தரிசன டிக்கெட்டுகளை மாதா மாதம் 24-ம் தேதி புக் செய்கிறது. இதன் மூலம் ரயில்வேக்கும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுமத்திர்கு வருவாய் கிடைக்கின்றன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர் ஆகியோர் திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் 2 பேர் உள்பட 6 பேர் கூட்டணி அமைத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழகங்களுக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து ஒரு நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
திருமலை திருப்பதியில் நடக்கும் இந்த மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
இதில், சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர், திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் 2 பேர் உட்பட 6 பேர் கூட்டணி அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணிகளில் இருந்த ருத்ர ராஜு, அமர்த்தா யாதவ் உள்பட 3 பேரை விஜிலன்ஸ் போலீஸா பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திரா மாநில சுற்றுலா மேம்பாட்டு கழக ஊழியர் ஒருவர் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
இந்த டிக்கெட்டுகளை வைத்து சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் , பக்தர்களை திருப்பதிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, கோயிலில் ஸ்கேன் செய்யும் பணியில் ருத்ர ராஜு உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து, அவர்கள் அந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து பக்தர்களை கோயிலுக்குள் அனுப்பினர். இதன் மூலம், இந்த நபர்களுக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்ததுடன், ஒரு டிக்கெட்டை ரூ 2500 வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருமலை போலீஸார் ருத்ர ராஜு உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை டிராவல்ஸ் ஏஜென்ட், ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“