திருப்பதி கோவிலில் போலி ஆர்ஜித சேவா டிக்கெட் தொடர்பான மோசடியை திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழல் தடுப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சென்னையை சேர்ந்த பக்தர்கள் ரூபாய் 73,000 வரை போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இணையதளம் மூலமாக கள்ள சந்தையில் போலி ஆர்ஜித சேவா டிக்கேட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான ஒரு புதிய மோசடி தற்போது திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை உலுக்கியுள்ளது. அது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ஆந்திர மாநில திருமலா காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.
திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? : இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..
பக்தர்களால் பெரிதும் விரும்பப்படுகின்ற ஆர்ஜித சேவை டிக்கெட் விற்பனை முறையை ஒழுங்குப்படுத்தி அதில் உள்ள பல்வேறு முறைகேடுகளை களைய திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் மோசடியாளர்கள் புதிய புதிய மோசடி வழிகளை கண்டுபிடித்து பக்தர்களை எளிதில் ஏமாற்றி அவர்களின் பணத்தை சுருட்டி செல்கின்றனர்.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போல போலி தளத்தை வடிவமைத்து இணையதள மோசடியாளர்கள் பகதர்களை தங்கள் போலி இணையதளத்துக்கு கவர்ந்து இழுக்கின்றனர். இந்த போலி இணையதளத்தை குறித்து சிறிதும் சந்தேகம் கொள்ளாத பக்தர்கள் டிக்கெட் வாங்க பணத்தை பரிமாற்றம் செய்துவிடுகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, சென்னையை சேர்ந்த கே பி ரவி நாரயணன் என்பவருக்கு அவரது உறவினர் ஒருவர் மூலமாக லத்திக் ராகுல் என்ற தரகர் அறிமுகமாகியுள்ளார். அந்த தரகரிடம் ரவி தனது குடும்பத்தினருக்கு 18 அபிஷேக டிக்கெட்களையும் 10 சுப்ரபாத தரிசன டிக்கெட்களையும் பெற்றுத்தரும்படி கூறியுள்ளார். ரூபாய் 73,000 கொடுத்தால், ரவி கேட்டதுபோல தன்னால் டிக்கெட் பெற்றுத்தரமுடியும் என அந்த தரகர் கூறியுள்ளார். இதனடிப்படையில் ரவி தனது வங்கி கணக்கு மூலம் ரூபாய் 73,000 த்தை அந்த தரகரின் கணக்குக்கு பறிமாற்றம் செய்துள்ளார். உடனே அந்த தரகரும் ரவி கேட்டதுபோல 18 அபிஷேக டிக்கெட்களையும் 10 சுப்ரபாத டிக்கெட்களையும் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் 2019 வருடம் டிசம்பர்13ம் தேதி ரவியின் குடும்பத்தினர் அபிஷேகம் மற்றும் சுப்ரபாத தரிசனத்துக்காக திருப்பதியில் உள்ள வைகுந்தம் வரிசை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்த திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் டிக்கெட்டை சரிபார்க்கும் போது அவர்களிடம் உள்ள டிக்கெட் போலியானது எனக் கூறியுள்ளனர்.
திருப்பதி தரிசனம்: இவ்வளவு மலிவான கட்டணத்தில் சொகுசான பயணமா?
தாங்கள் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்ட ரவியின் குடும்பத்தினர், அந்த போலி தரகர் குறித்தும் அவரை தங்களுக்கு அறிமுகப்படுத்திய உறவினரைக் குறித்தும் தங்களுக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் தேவஸ்தான ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் கூறி ஒரு புகார்மனுவையும் வழங்கியுள்ளனர். இதைதொடர்ந்து தேவஸ்தான ஊழல் தடுப்பு அதிகாரிகள் திருமலா காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பக்தர்கள் போலி தரிசன டிக்கெட் பெற போலி தரகர்களையும் இடைதரகர்களையும் நம்பி ஏமாறாமல் திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகார்பூர்வ இணையதளம் வாயிலாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினர் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.