வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது. டிட்லி புயல் என்று அழைக்கப்பட்ட இந்த புயல், ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த புயல், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது.
டிட்லி புயல் தாக்கம் :
இதனால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஒடிசாவின் கஞ்சன் மாவட்டம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
டிட்லி புயலின் காரணமாக கோபால்பூரில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் ஆய்வு செய்தார். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, 15 மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரயில் சேவைகள் பல இடங்களில் முற்றிலுமாக முடங்கியிருந்தது.