உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 125 எம்.பி.க்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் அறுதி பெரும்பான்மை பெற்று மசோதா நிறைவேறியது. இதனால் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பிரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அதிமுக ஆதரவு தெரிவித்தது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகிய முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அப்போது, ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இன்டர்நெட், மொபைல் வசதி, லேண்ட்லைன், உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் அங்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக பாடகர் டிஎம் கிருஷ்ணா, பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'காஷ்மீருக்கு ஒரு தபால் அட்டை' என்ற பெயரில், 'போன் மணி அடிக்காத காஷ்மீருக்கு ஒரு தபால் அட்டை' என்று குறிப்பிட்டு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து கிடைத்திருக்கிறது.