மாநிலங்களவை எம்.பி.க்கள் 19 பேர் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் 4 பேரின் சஸ்பெண்ட்-ஐ எதிர்த்து நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலை முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதன்கிழமை (ஜூலை 27) போராட்டம் நடத்தின.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவ சேனா, ராஷ்ட்ரீய லோக் தளம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்எஸ்பி மற்றும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ‘அனைவருக்கும் அழைப்பு விடுப்பது எங்களது கடமை. சிலருக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கலாம்.
அதனால் அவர்களுக்கு இங்கு வர நேரம் இல்லாமல் இருக்கலாம். மேலும் இங்கு எத்தனை பேர் வந்தார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை. இதுதான் முக்கியமான பிரச்சினை” என்றார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஒ ப்ரைன் ட்விட்டரில், ’19 எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால் நாங்கள் அரசுக்கு ஒன்றை கூறுகிறோம்.
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை. இதற்காக அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றன” எனத் தெரிவித்துள்னார்.
சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்;ட பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த 19 பேரும் ஒருவாரம் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முன்னதாக தமிழக மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பதது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil