Advertisment

எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய மம்தா; ராகுல் மீதான நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

2024ல் தனித்து போட்டியிடுவோம் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கு அழைப்பு; ஆனால், ராகுல் விவகாரத்தில் மௌனம் காக்கிறார் காங்கிரஸ் கூட்டாளியும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார்

author-image
WebDesk
New Update
mamata

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எம்.பி அபிஷேக் பானர்ஜியுடன் கொல்கத்தா மைதானத்தில் உள்ள ரெட் ரோட்டில் உள்ள பி.ஆர் அம்பேத்கர் சிலை அருகே தர்ணா நடத்தினார் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பார்த்தா பால்)

Atri Mitra , Santosh Singh

Advertisment

மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பா.ஜ.க.,வுக்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டாக எதிர்த்து போராட அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து மம்தா குறிப்பிடாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வலுவாக பேசினார், மேலும் ராகுலுக்கு எதிரான வழக்கை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

நிலைப்பாட்டை மாற்றுவதைக் குறிக்கும் வகையில், ராகுலின் தகுதி நீக்கம் மற்றும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அழைத்த எதிர்க்கட்சி கூட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொண்டது.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தியின் அதானி வீடியோ வியூவர்ஷிப் முடக்கப்படுகிறதா? காங்கிரஸின் கூற்றை ஆராயும் யூடியூப்

தேர்தல் பேரணியின் போது பேசிய கருத்துக்களுக்காக ராகுல் தண்டனை மற்றும் தகுதி நீக்கத்தை சந்திக்க நேரிடும் எனில், 2021 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது மம்தாவை "தீதி ஓ தீதி" என்று கிண்டல் செய்து "மேற்கு வங்கத்தில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக" பிரதமர் மோடி மீது ஏன் குற்றம் சாட்டக்கூடாது என்று அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

publive-image

தர்ணாவில் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது

திரிணாமுல் காங்கிரஸின் சமமான ஆதரவு காங்கிரஸின் இதயத்தை மகிழ்விக்கும் அதே நேரத்தில், அதன் கூட்டாளியும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி (யு)) கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் புதன்கிழமை கலவையான சமிக்ஞைகளை வழங்கியுள்ளார். ராகுலின் தகுதி நீக்கம் மற்றும் அதுபற்றி அவர் மௌனம் காப்பது குறித்து கேட்டதற்கு, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், "நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பாக அவர் ஒருபோதும் பேசியதில்லை" என்று கூறினார், அதே நேரத்தில் இதுபோன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு சட்டப்பூர்வ ஏற்பாடு உள்ளது என்றும் கூறினார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அபிஷேக் பானர்ஜி, “ராகுல் காந்தி தனது கருத்துக்காக சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், பிரதமர் மோடிக்கும் (திரிணாமுல் காங்கிரஸில் இருந்து மாறிய பா.ஜ.க தலைவர்) சுவேந்து அதிகாரிக்கும் ஏன் தகுதி நீக்கம் நடக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்தா மற்றும் எம்.எல்.ஏ தேப்நாத் ஹன்ஸ்தா ஆகியோரை “தனது காலடியில் இருக்கத் தகுதியானவர்கள்” என்று பழங்குடியினரை அவமதித்ததாக அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டினார். "(ராகுலுக்கு எதிரான) சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை  ஆயுதமாக்குமாறும், ஒரு மாதத்திற்குள் (மோடி, சுவேந்து அதிகாரிக்கு எதிராக) ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறும் எங்கள் சட்டப் பிரிவை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அபிஷேக் பானர்ஜி கூறினார்.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டு நாள் தர்ணாவைத் தொடங்கிய மம்தா பானர்ஜி, மாநிலங்கள் முழுவதும் எதிர்க்கட்சிகள் இதை நடத்தினால் பா.ஜ.க தோற்கடிக்கப்படும் என்று கூறினார். “பா.ஜ.க.,வுக்கு எங்கிருந்து சீட் கிடைக்கும்? உத்தரப்பிரதேசமா? பா.ஜ.க.,வுக்கு எதிராக அகிலேஷ் (யாதவ்) பக்கம் நிற்க உ.பி.க்கு செல்வோம். பீகார், வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அவர்களுக்கு சீட் கிடைக்காது,” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

publive-image

தர்ணாவில் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது

மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி இருவரும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அமைப்புகளை பா.ஜ.க பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். "அவர்கள் உத்தவ் (தாக்கரே), அரவிந்த் (கெஜ்ரிவால்), ஜெகன் மோகன் (ரெட்டி), ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி (யாதவ்) ஆகியோரைக் குறிவைத்தனர்," என்று பல்வேறு கட்சிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களை மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

சகர்திகி இடைத்தேர்தலில் சமீபத்தில் காங்கிரஸ்-சி.பி.ஐ(எம்) கட்சிகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, “2024 இல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களுடன் கூட்டணி வைக்கும். மற்ற அரசியல் கட்சிகளுடன் நாங்கள் செல்ல மாட்டோம். மக்கள் ஆதரவுடன் தனித்து போட்டியிடுவோம். பா.ஜ.க.,வை தோற்கடிக்க நினைப்பவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். சி.பி.ஐ(எம்) மற்றும் காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் உண்மையில் பா.ஜ.க.,வுக்குத்தான் வாக்களிக்கிறார்கள்,” என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

பீமாராவ் அம்பேத்கரின் சிலைக்கு அருகில், அவரது அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களால் சூழப்பட்ட நிலையில், அரசியல் சாசன நகலுடன் தர்ணாவில் அமர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “எங்கள் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதும், வங்காளத்தின் மீதான மத்திய அரசின் அக்கறையின்மையை எதிர்த்துப் போராடுவதும் ஆகும். தேவைப்பட்டால், பிரதமர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து தர்ணா நடத்தும் தைரியம் எனக்கு உள்ளது,” என்று கூறினார்.

விலைவாசி உயர்வு தொடர்பாக பா.ஜ.க அரசைக் குறிவைத்து, தர்ணா நடைபெறும் இடம் முழுவதும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எல்.பி.ஜி சிலிண்டர்களின் கட்அவுட்களை வைத்திருந்தது.

சி.பி.ஐ(எம்) (CPI(M))ஐத் தாக்கிய மம்தா பானர்ஜி, சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் "ஊழல்களில்" திளைத்து வருகிறது என்று கூறினார். பா.ஜ.க "குண்டர்கள்" என்று குறிப்பிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ரம்ஜான் மற்றும் ராம நவமியின் போது கலவரம் போன்ற சூழ்நிலையை அவர்கள் உருவாக்க விரும்புவதாக கூறினார். கட்சியிடமிருந்து நழுவிப் போகும் முஸ்லிம் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் முயலும் வகையில், “முஸ்லீம் பகுதிகளில் யாரையாவது தாக்கினால், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... அனைவரும் ராம நவமி, ரம்ஜான், மற்றும் அன்னபூர்ணா பூஜையை அமைதியாக கொண்டாட வேண்டும்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

500 மீட்டர் தொலைவில் நடந்த அவரது பேரணியில், "தேவைப்பட்டால், மேற்கு வங்காளத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்துவதை எதிர்த்து டெல்லியில் பேரணிகளை நடத்துவோம்," என்று அபிஷேக் பானர்ஜி கூறினார்.

மத்திய அமைப்புகளின் "தவறான பயன்பாடு" குறித்து பேசிய அபிஷேக் பானர்ஜி, "ஊழல் நடந்திருந்தால் விசாரணை மற்றும் நீதியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தேர்ந்தெடுத்து குறிவைக்கும் கொள்கை இருக்கக்கூடாது,” என்று அபிஷேக் பானர்ஜி கூறினார்.

”ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களுக்கு எதிராக விரைவாகச் செயல்பட்ட “ஒரே கட்சி” திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே. பார்த்தா சாட்டர்ஜி மீது ஆறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களிடம் செல்லும்போது எங்கள் தொண்டர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்,” என்று அபிஷேக் பானர்ஜி கூறினார்.

2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி ஒருவருடன் பா.ஜ.க தலைவர்கள் சமீபத்தில் குஜராத்தில் மேடையைப் பகிர்ந்து கொண்டதையும் அபிஷேக் பானர்ஜி சுட்டிக்காட்டினார்.

”பா.ஜ.க அரசு என் மீது போடும் வழக்குகளுக்கு பயப்படவில்லை. வங்காளத்தில் கடந்த 22 மாதங்களில் 21 சி.பி.ஐ வழக்குகள் பதிவாகியுள்ளன. இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. அவர்கள் மாநில அரசை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தி, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பொய் வழக்குகளில் சிறையில் அடைக்க விரும்புகிறார்கள்,” என்றும் அபிஷேக் பானர்ஜி கூறினார்.

நிதிஷ் குமாரின் மௌனம்

ராகுல் விவகாரம் குறித்து கேட்டதற்கு, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “அரசியலுக்கு வந்ததில் இருந்து நான் நீதிமன்ற விவகாரங்கள் குறித்து பேசியதே இல்லை. என் தலைவர் மீது வழக்கு போடப்பட்டாலும் நான் பேசுவதில்லை. நான் 17 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளேன், நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் விசாரணைகளை எதிர்கொள்பவர்கள் குறித்து நான் பேசியதாக ஒரு உதாரணத்தையும் குறிப்பிட முடியாது,” என்று கூறினார்.

முன்னதாக, ஜே.டி.யு தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் அல்லது லலன் சிங், ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியிருந்தார்.

எதிர்க்கட்சி ஒற்றுமை என்ற பெயரில் "அனைத்து ஊழல் கட்சிகளும்" கைகோர்த்துள்ளன என்ற பிரதமர் மோடியின் செவ்வாய்க் கிழமையின் கருத்து குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நிதிஷ் குமார், ”அந்த ஏஜென்சிகள் பா.ஜ.க.,வின் எதிரிகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுவதாகத் தெரிகிறது. நாங்கள் பா.ஜ.க.,வுடன் இருந்தவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாததால், அவர்கள் (ஆர்.ஜே.டி தலைவர்கள்) மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்,” என்று கூறினார்.

முன்னதாக, ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா குறித்தும் நிதிஷ் குமார் பேசவில்லை. காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நடத்திய சிறிய அளவிலான தூரம் கொண்ட யாத்திரையிலும் ஜே.டி.(யு) பங்கேற்கவில்லை.

2016 ஆம் ஆண்டு முதல் ராகுலுடன் நிதிஷ் குமார் கடினமான உறவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, அப்போது எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்காக ராகுல் எல்லோரையும் அரவணைப்பார் என்று அவர் எதிர்பார்த்தார். நிதிஷ் குமார் 2017 இல் NDA வில் இணைவதற்கு முன்பு, UPA இல் இருக்க கடைசி முயற்சியை மேற்கொண்டார் மற்றும் ராகுலை சந்தித்தார், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒற்றுமையை காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக நிதிஷ் குமார் முன்பு கூறியிருந்தார். ”எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு காங்கிரஸ் வலுவான முயற்சி எடுக்காதது குறித்து ஜே.டி.(யு) மகிழ்ச்சியடையவில்லை. இதற்கு காங்கிரஸே கருவாக இருக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் அடிக்கடி கூறி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு சுமூகமாக பதிலளிக்கவில்லை,” என்று ஜே.டி.(யு) தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment