கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஆச்சரியம், அதிர்ச்சி, சுவாரஸ்யம் எனப் பலவற்றை சந்தித்து நிறைவு பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் உற்சாகமாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் தொகுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கர்நாடகம் மட்டுமல்லாது தமிழகத்திலும் கவனம் பெற்றுள்ளது. காரணம், தமிழக உள்துறை செயலாளராக சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற அமுதா ஐ.ஏ.எஸ்-ன் கணவர் ஷம்பு கல்லோலிகர் ஐ.ஏ.எஸ் இத் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர் (59). மத்திய அரசு மற்றும் தமிழக அரசில் பல்வேறு துறைகளில் 30 வருடங்களாக பணியாற்றி இவர், கடந்தாண்டு நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் ஒன்றியம் யபரட்டி எனும் பகுதியை சேர்ந்தவர். தன்னுடைய ஊர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்ய முடியவில்லை என அறிந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இவரின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக அறியப்படுகின்றனர். இவரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிடுவார் என அறியப்பட்ட நிலையில், பின்னர் சுயேட்சையாக களமிறங்கினார்.
முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட கல்லோலிகர் 54,930 வாக்குகள் பெற்று ஜே.டி.எஸ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார். 57,500 வாக்குகள் பெற்ற பா.ஜ.க வேட்பாளர் துரியோதன் மகாலிங்கப்பா ஐஹோளிடம் வெறும் 2,570 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கல்லோலிகர் 2-வது இடம் பிடித்தார்.
கல்லோலிகர் கூறுகையில், மாணவர்கள், “பெண்களை எனது ஆதரவுத் தளமாக கொண்டுள்ளேன். ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை நோக்க கொண்டுள்ளேன். அனைத்து சமூகத்தினரும் எனக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்தனர். ரேபாக் தொகுதியில் லிப்ட் பாசனத் திட்டம், கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு 39 ஏரிகளை நிரப்புதல், செவிலியர் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவுவது என உறுதி அளித்தேன்.
மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எங்கள் தொகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, மக்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப் பாடுபடுவேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“