ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பிரதமர் நரேந்திர மோடி திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்த விரும்புகிறார். நாடு முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதுதான் இந்தத் திட்டத்தின் அம்சம்!
ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்துவதன் மூலமாக இதர காலகட்டங்களில் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி முக்கிய திட்டங்களைக்கூட சில மாநிலங்களில் தாமதப்படுத்த வேண்டிய நெருக்கடி உருவாவதை இதன் மூலமாக தவிர்க்கலாம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு!
தவிர, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் இதர நாட்களில் தேர்தல் சீர்திருத்தங்களில் கூடுதல் கவனம் செலுத்த தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் கிடைக்கும். மத்திய அரசின் இந்த யோசனைக்கு சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துவிட்டது.
மேலும் இது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை உருவாக்க சட்ட ஆணையம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இதற்காக டெல்லியில் ஜூலை 7, 8-ம் தேதிகளில் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது.
அதிமுக சார்பில் இந்தக் கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கின்றனர்.
இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 29-ம் தேதி சட்ட ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில், ‘தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்கும் எந்த முடிவையும் ஏற்க முடியாது’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதாவது, மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டப்படி 2021-க்குள் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் மாநிலங்களில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்திவிட திட்டமிடுகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனாலேயே அதிமுக இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவிடன், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஆதரவாக அதிமுக அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல்? டெல்லி அதிரடி மூவ்