’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
எல்லா வருடமும் ஜூன் 2ம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராஜ்பவனில் இந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “ ஆட்சி செய்வதற்கு உதவும் என்பதால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது இந்த அடையாளங்கள் அரசியல் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளது. மலையாளிகள், தமிழர்கள், பிகாரிகள், யு,பீஸ் என்று அழைக்கப்படுவது, இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு எதிராக உள்ளது “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், திராவிட மாடல் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவியது. ”திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம், காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது’ என்று ஆங்கில பத்திரிக்கைக்கு ஆர்.ரன். ரவி பேட்டியளித்தார்.
திராவிட மாடல் என்பது பாஜகவின் இந்துத்துவ கொள்கைக்கு மாற்றானது என்று முதல்வர் ஸ்டாலினும் பொதுக் கூட்டங்களில் பேசினார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆளுநர் “ மாநிலங்களுக்கான தனி அடையாளம், மக்களை பிரிக்கும் மனநிலையில் உருவாக்கப்படுகிறது. ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு இது எதிரானது. இந்தியர்களாக ஒன்றுபடும் நோக்கத்தை இது வலுவிழக்க செய்கிறது. “ என்று கூறினார்.
”தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களை வேற்று மாநிலத்தவர்களாக பார்ப்பது சரியா?. அவர்கள் அனைவரும் இந்தியர்கள்தானே ” என்றும் கூறினார்.
” ஆற்றல் மிகுந்த ஆட்சி செய்யவும், மக்களின் நலனுக்காவும்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமாக இது அரசியல் அடையாளங்களாக மாறியுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் மனநிலை தினமும் வளர்க்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று கூறினார்.
கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மெட்ரால் மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்டதை போல, பிகாரில் இருந்து ஜார்கண்ட், உத்தர பிரதேசத்தில் இருந்து உத்ராகாண்ட், மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர், ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி, திறமையாக நிர்வாகம் செய்யவே இது உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.
”ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தது போல் மாற்றங்கள் இருக்கிறது. மாநிலத்திற்கும் உள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. இதுபோல நடனம், கலை மற்றும் வழிபாடு முறைகளில் மாற்றம் உள்ளது. ஆனால் நாம் வழிபடும் கடவுள், புராணங்கள் எல்லாம் பொதுவாக உள்ளது. சிவன், ராமர், கிருஷ்ணா, பெண் கடவுள்கள் ஆகியவை ஒன்றாக உள்ளது. நமது பாரம்பரியமான கலாச்சாரத்தால் நாம் ஒன்றுபட்டுள்ளோம். மொழி, உணவு என்று நாம் வேறுபட்டாலும், கலாச்சாரத்தால் ஒன்றுபடுகிறோம். ” என்று கூறினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு கூறுகையில் “ மதங்களுக்கு வெளியேதான் நமது கலாச்சாரம் இருக்கிறது என்பதே ஆளுநருக்கு தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் எப்போதும் மாநிலங்களாக பிரிந்து இருப்பதில் விருப்பம் காட்டாது. ஒரே நாடு. ஒரே மொழி என்ற கொள்கை கொண்டவர்கள். தமிழ் கலாச்சாரத்தை அதிகமாக பாராட்டும் அதே நேரத்தில் தமிழர்களாக ஒன்றுபடும் மனநிலையை தொடர்ந்து ஆர். என் ரவி அவமதிக்கிறார்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.