மக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை: மன்மோகன் சிங்
மூன்று இளைஞர்களில் ஒருவர் அம்மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கிறார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது, இன்று உழவர் தற்கொலைகளில் முதலிடத்தில் உள்ளது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்கள் சார்ந்த திட்டங்களை கண்டறிவதில் மத்திய அரசு தோற்றுவிட்டது என்றும், அதன் பிரதிபலிப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கைகளில் உறுதியாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisment
"நிர்மலா சீதாராமனின் அறிக்கைகளில் காணப்படுவது போல் மக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை. ஒருவர் பொருளாதாரத்தை சரி செய்வதற்கு முன், பிரச்சனையை சரியான முறையில் கண்டறிவது அவசியம்" என்று மும்பையில் செய்தியாளர்களிடம் சிங் கூறினார்.
தீர்வுகளை கண்டுபிடிக்க முடியாததால் எதிர்க்கட்சியின் மீது பழி சுமத்த முயற்சிப்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த நான்கு காலாண்டுகளில் மகாராஷ்டிராவின் உற்பத்தித் துறையின் வீழ்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டிய மன்மோகன் சிங், "மூன்று இளைஞர்களில் ஒருவர் அம்மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கிறார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது, இன்று உழவர் தற்கொலைகளில் முதலிடத்தில் உள்ளது," என்றார்.
நிலைமையைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சிங், பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றுவதற்கான கட்டமைப்பைத் தவிர, வேலையின்மை பிரச்சனைக்கு சாத்தியமான தீர்வு எதுவும் இல்லை என்றார். தொழில்கள் வளர ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிருஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.