நீங்கள் வெறும் பாயில் படுத்து தூங்கும்போது கீழே விழமாட்டீர்கள் என்று 2001ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரம் -1.4 சதவீதமாக பதிவான போது அப்போதைய நிதி அமைச்சராக பணியாற்றிய ஜி.எல். பீரிஸ் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்போது இலங்கை பொருளாதாரம் மிகவும் பாதித்திருந்தது.
தற்போது இருபது வருடங்களுக்கு பிறகு அந்த பாயில் இருந்தும் கீழே விழுந்துவிட்டது இலங்கை.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கின்ற நிலையில் முன்பெல்லாம், இலங்கை தெருக்களில் உள்ள கடைகளில் ஒரு வாரத்திற்கும் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். ஆனால், இன்று அந்த தெருக்களும் அந்த கடைகளில் இருக்கும் அலமாரிகளும் காலியாக இருக்கிறது. ஆனால் பெட்ரோல் பங்குகளில் நிற்கும் கூட்டத்தின் நீளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வீட்டுக்குள் மன விரக்தி காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை வென்றதற்காக எந்த குடும்பத்தை சிங்கள பேரினவாத மக்கள் வணங்கினார்களோ அவர்கள் இன்று அதே குடும்பத்தினர் மீது வெளிப்படையான கோபத்தை தெருக்களில் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்புவில் வெள்ளிக்கிழமை திரண்ட பொதுமக்கள் கூட்டம் கோத்தபாய பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனார். அதிபர் கோத்தபாய ராஜபக்ஷேவின் சகோதரரான பிரதமர் மஹிந்தவின் குடியிருப்பான அலரி மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர்.
அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விண்ணைமுட்டும் விலைவாசிக்கு எதிராக சில வாரங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முதன்முறையாக போராட்டத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது. டீசல் தட்டுப்பாடு என்றால் பாலுக்கும் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை அதன் அனைத்து பால் பொருட்களையும் இறக்குமதியே செய்கிறது. பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட தற்போது பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கீல்ஸ் என்ற பல்பொருள் அங்காடியில் ஒருவருக்கு ஒரு நாளுக்கு ஒரே ஒரு பால் பவுடர் பாக்கெட் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று எழுதி ஒட்டியுள்ளது. ரூ.100க்கு நான்கு தயிர் பாக்கெட்டுகளை வாங்கினால் மட்டுமே ரூ. 790க்கு அதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பால் பவுடர் வழங்கப்படும் என்று மக்களிடம் பேரம் பேசுகின்றனர் சிறிய கடை உரிமையாளர்கள்.
அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடு இலங்கை. ஆனால் ரசாயன உரங்கள் வாங்க போதுமான டாலர்கள் கையிருப்பு இல்லாத காரணத்தால் அதிபர் கோத்தபாய கடந்த ஆண்டு இயற்கை வேளாண்மைக்கு இலங்கை மாறுகிறது என்று அறிவித்த நிலையில் தற்போது அரிசி விளைச்சலும் ஏமாற்றம் அளித்துள்ளது.
டாக்ஸி ட்ரைவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப்பில் குரூப்களை ஆரம்பித்து எந்த பெட்ரோல் பங்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது எங்கே கூட்டம் குறைவாக இருக்கிறது என்று ரியல் டைம் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்கின்றனர். வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பால் பொருட்கள் புதிதாக வந்தவுடன் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வாங்கிச் செல்லுமாறு கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். சமையல் எரிவாயு பற்றாக்குறை நீடிக்கிறது. தொடர்ந்து நீடித்து வரும் மின்தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரமாக இருந்த காலத்திலும் கூட இவ்வளவு மோசமான பொருளாதார பாதிப்புகளை இலங்கை மக்கள் சந்திக்கவில்லை. அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்ட களத்தை நோக்கி திரும்பியுள்ளனர். கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் தன்னுடைய கையில் “நீங்கள் தவறான தலைமுறையுடன் மோதுகின்றீர்கள்” என்ற அர்த்தம் கொண்ட பதாகையை வைத்திருந்தார்.
இந்த தவறான நிர்வாகம் எங்களின் எதிர்காலத்தையும், எங்கள் நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை, அனைத்தும் விலை உயர்ந்தாக இருக்கிறது என்று 21 வயது மாணவி வினுரா என்பவர் கூறினார். வரும் நாட்களில் பற்றாக்குறையின் தீவிரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் கூற்றுப்படி, உணவுக்கான இந்தியாவின் $1 பில்லியன் கடனின் கீழ் 40,000 மெட்ரிக் டன் அரிசியின் முதல் ஆர்டரின் ஒரு பகுதி இலங்கை வந்து கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை மொத்தம் 2,70,000 மில்லியன் டன் டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொட்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. ராஜபக்ஷேக்களை காப்பாற்ற இந்தியா இந்த உதவிகளை செய்கிறது என்று எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற விழிப்புடன் இந்தியா செயல்படுகிறது.
பாக்லே இது குறித்து பேசிய போது தற்போதைய உதவி தவிர்த்து கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வீடுகள் கட்ட, விவசாயம், பயிற்சி தேவைகளுக்காக வழங்கியுள்ளது. இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் இலங்கை மக்களுக்கு நன்மைகளையும் அபிவிருத்தியையும் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார்.
நெருக்கடியின் போது இலங்கை மக்களின் துன்பங்களை குறைப்பதற்கான இந்தியாவின் உதவி மனிதாபிமான அடிப்படையிலானது என்றும் அவர் கூறினார். ஒரு அரசாங்கத்திற்கு மற்றொரு அரசு வழங்கும் உதவி என்பது இல்லாமல், ராஜபக்ஷே குடும்பத்திற்கு எதிரான கோஷங்கள் தெருக்களில் உரத்த குரலில் ஒலித்தபோதும், இது மனிதாபிமான அடிப்படையிலான உதவியும் கூட என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ஷே அரசை ஆதரிக்க வேண்டாம் என்று நான் இந்திய அரசிடம் கூற வேண்டும். இந்தியாவின் உதவிக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம் ஆனால் இந்த இக்கட்டான சூழலின் போது இலங்கை மக்கள் பக்கம் அரசு நிற்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று போராட்டத்தில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.