எஸ்பிஐ வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திரும்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அவரை திரும்பவும் இந்தியா அழைத்துவர சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. அந்த முயற்சியின் பலனாக, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லலாம் என்று லண்டன் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்தும் அவரை மத்திய அரசு நீக்கியது.
இந்தச் சூழ்நிலையில், எனது வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என விஜய் மல்லையா மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியே ஊழல் கறை கொண்டிருப்பதால், என் மீது நடத்தப்படும் விசாரணை 'மிகவும் குற்றமானது' என்று அந்த மனுவில் குறிப்பிட்ட மல்லையா, வங்கி விவரங்களை அனுப்ப தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மல்லையாவின் சுவிஸ் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், "விசாரணை நடத்தும் சிறப்பு அதிகாரி மீதே ஊழல் கறை படிந்துள்ளது. இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
ஆனால், இந்த மனுவை சுவிஸ் கூட்டமைப்பு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சிபிஐ வேண்டுக்கோளுக்கு இணங்க, விஜய் மல்லையாவின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.