சோனியா காந்தியின் உதவியாளரும், காங்கிரஸின் மூத்தத் தலைவருமான டாம் வடக்கன் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முக்கியக் கட்சிகள் தங்களது கூட்டணிகளை முடிவு செய்துவிட்டன. அதோடு பிரச்சாரக் களமும் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது.
இந்நிலையில் சில அரசியல் பிரமுகர்கள் தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.
20 வருடங்களாக காங்கிரஸில் பணியாற்றி வந்த வடக்கன், நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால், சோனியா தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது, தனியாக ஊடகப் பிரிவை உருவாக்கிக் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் இந்த வடக்கன்.
ஊடகப் பிரிவு நன்கு வளர்ந்த பின் ஓரங்கட்டப்பட்ட இவர், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர்பிரசாத் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.
அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த டாம் வடக்கன், “புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் நமது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கான ஆதாரங்களை ஒரு அரசியல் கட்சி கேட்பது தேசத்துக்கு எதிரானது. இது எனக்கு மிகுந்த வருத்தமளித்ததால், காங்கிரஸில் இருந்து விலகினேன்” என்றார்.
டாம் வடக்கனின் திடீர் விலகலால், காங்கிரஸில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் தொண்டர்கள்.