Odisha | தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் வி. கார்த்திகேய பாண்டியன். இவர், 2000வது ஆண்டில் நடந்த குடிமையியல் தேர்வில் வெற்றிப் பெற்று, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், ஓடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக உயர்ந்தார். பின்னர் அவரின் கவனத்தை ஈர்த்து அதிகாரி பதவியில் இருந்து விலகி அரசியலில் நுழைந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். வி.கே பாண்டியன் தற்போது ஒடிசாவின் 5டி திட்டத்தின் தலைவராக உள்ளார்.
இந்தத் திட்டம் வெளிப்படைத் தன்மை, தொழில்நுட்பம், இணைந்து பணியாற்றுதல் (டீம் ஓர்க்) உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டது.
இந்த நிலையில் வி.கே. பாண்டியன் ஓடிசாவின் கஞ்சம் பெல்லகுந்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் மீது கூட்டத்தில் இருந்த ஒருவர் தக்காளியை வீசினார்.
அவரை பிஜூ ஜனதா தளம் தொண்டர்கள் பிடித்து தாக்கினார்கள். விசாரணையில் வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசியவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
இது குறித்து பேசிய வி.கே. பாண்டியன், “முட்டையால் அடித்தாலும், கருப்பு மை ஊற்றினாலும், தக்காளி வீசினாலும் என் மக்கள் பணி தொடரும்” என்றார்.
வி.கே. பாண்டியன் மதுரையை சேர்ந்தவர் என்ற போதிலும் அவரது மனைவி ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“