Manoj C G
Top Congress leaders meet Rahul Gandhi regarding congress parliamentary board : நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான அளவில் தோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் பல்வேறு குழப்பமான சூழல் நிலவி வருகின்றது. இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்ததிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தந்த அழுத்தமே காரணம் என்று ராகுல் காந்தி குறை கூறியதோடு, தலைமை பதவியில் இருந்து விலகுவதாக திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு வருத்தம் தெரிவித்து வந்ததோடு காங்கிரஸ் தலைமையை நீங்கள் தான் ஏற்று நடத்த வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாரத்தில் ஒரு நாள் ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். அதில் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருதல் தொடர்பாகவும், ராகுல் காந்தியின் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை குறைக்க புதிய தலைவர்கள் (working presidents) நியமத்தில் தொடர்பாகவும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராகுல் தான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும். அவரை விட வேறொருவரை எங்களால் காங்கிரஸ் தலைமையாக ஏற்றுக் கொள்ள இயலாது. 10 வருடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது இருக்கும் சூழலில் ராகுலை மட்டுமே எங்களால் ஏற்றுக் கொள்ள இயலும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி மற்றும் அகமது படேல் முதலில் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளனர். முதலில் காங்கிரஸ் தலைமையில் ராகுல் காந்தி நீடித்து இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் முதல் கோரிக்கை. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். பாராளுமன்ற குழு மற்றும் வொர்க்கிங் ப்ரெசிடெண்ட்ஸ் ஆகியோரை நியமிப்பது குறித்து மெதுவாகவே பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் தான் காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
பாராளுமன்ற குழு, காங்கிரஸ் உறுப்பினர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் திறம்பட நடைபெற உதவிபுரியும் வண்ணம் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த குழு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களால் உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சித் தலைவர் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம்பெறுவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பாராளுமன்ற குழு காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்புகளில் எப்போதுமே இருக்கும் ஒன்று. 1990ம் ஆண்டில் இருந்தே இந்த குழு இயங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.