தார்மீகக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையாக, கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் கல்லூரி இளங்கலை மாணவர்கள் கல்லூரிக்குள் கிழிந்த ஜீன்ஸ் போன்ற "அநாகரீகமான" ஆடைகளை அணிய மாட்டோம் என்று சேர்க்கைக்கு முன் உறுதிமொழி அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோரும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
கல்லூரி இணையதளத்தில் உள்ள சேர்க்கை அறிவிப்பின் படி, ’புதிய முதலாவது செமஸ்டர் வகுப்புகள் 07.08.2023 அன்று தொடங்கும் ***கிழிந்த ஜீன்ஸ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.*** ஃபார்மல் ஆடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள், “ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நான், கிழிந்த/செயற்கையாக கிழிந்த ஜீன்ஸ் அல்லது எந்தவிதமான அநாகரீகமான ஆடைகளையும் அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைய மாட்டேன்.
நான் படிக்கும் காலத்தில், கல்லூரி வளாகம் முழுவதும் சாதாரண சிவில் உடைகளையே அணிவேன் என்பதை இதன் மூலம் உறுதியளிக்கிறேன், என்ற உறுதிமொழியில் கையொப்பமிட வேண்டும்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் பூர்ண சந்திர மைதி கூறுகையில், “கடந்த ஆண்டும் இதேபோன்ற அறிவுரையை எங்கள் மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம். ஆனால் அத்தகைய அறிவிப்பையும் மீறி சில மாணவர்கள் கிழிந்த ஜீன்ஸ் உடையுடன் கல்லூரிக்கு வருவது தெரிந்தது. எங்கள் மாணவர்கள் இதுபோன்ற உடையில் வளாகத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.
இதுபோன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வர யாரையும் அனுமதிக்க மாட்டேன். அதனால்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்க, இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆலோசனையை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
மேலும், சேர்க்கைக்கு முன், அத்தகைய ஆடைகளை அணிய மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும், என்று கூறினார்.
அத்தகைய அறிவுரை ஒருவரின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்படுமா என்பது குறித்து கருத்து கேட்டபோது, “அவர்களுக்கு கல்லூரிக்கு வெளியே கண்டிப்பாக அந்த சுதந்திரம் இருக்கும்.
உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் ஒழுக்கத்தையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். கல்லூரி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களை அவர்கள் கடைபிடிக்க வேண்டும், என்று கல்லூரி முதல்வர் பூர்ண சந்திர மைதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.