வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மத்திய இணையமைச்சர் ஒருவரின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் மாநில அமைச்சர் ஒருவரின் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் இம்பால் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கும்பல் தீ வைத்தது.
இது மாநில அரசின் முழுமையான தோல்வி என அவர் கூறினார். சிங், மணிப்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஆவார்.
மேலும், மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கோங்பாவில் அமைந்துள்ள சிங்கின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்
முதல் தாக்குதல் மே 25 அன்று இரவு அவர் வீட்டில் இருந்தபோது நடத்தப்பட்டது. ஆனால் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின்போது வீட்டில் யாரும் இல்லை.
அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தியதாக வீட்டில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ராமு தானோஜம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், “இரண்டு புறங்களில் இருந்தும் கும்பலாக சிலர் வந்தனர். அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்” என்றார். இது தொடர்பாக ஏ.என்.ஐ.யிடம் பேசிய சிங், “இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அன்றைய தினம் சாதாரணமாகதான் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து தாக்கியுள்ளனர்.
பெட்ரோலை கொளுத்தி வீசியுள்ளனர். இது என் உயிரைக் கொல்லும் முயற்சியாகதான் உள்ளது. மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“