Aadhaar Number Challenge-ஐ ட்விட்டரில் ஏற்றுக் கொண்ட ஆர். எஸ். சர்மா
ஆதார் எண் (Aadhaar Number) பாதுகாப்பு குறித்து ட்ராய் அமைப்பின் சேர்மன் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்த்தில் ஒருவர் விடுத்த சேலஞ்சினை ஏற்றுக் கொண்டார். சர்மா ஆதார் மையத்தில் தலைமைப் பொறுப்பில் முன்பு பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
ஆதாரில் தனிப்பட்ட நபரின் தகவல்கள் திருடுபோவதாகவும், அது பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது என்று பொதுமக்கள் அவ்வபோது குறை கூறுவது வழக்கம்.
இது தொடர்பாக ஷர்மாவிடம் "இவ்வளவு பாதுகாப்பானதாக ஆதார் எண் இருக்குமென்றால் உங்களின் ஆதார் எண்ணை ட்வீட் செய்யுங்கள்" என்று அவரின் ஃபாலோவர் ஒருவர் கேள்வி எழுப்ப, ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளார் ஷர்மா.
என்னுடைய ஆதார் எண்களை இங்கே நான் பதிவு செய்கிறேன். அதனால் என்னுடைய தனிநபர் வாழ்வில் என்ன பிரச்சனை வரக்கூடும் என்று யாராவது ஒருவர் பதில் கூறுங்கள் என்று கூறி தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்திருக்கிறார்.
இதனை சவாலாக ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆராய்ச்சியாளர் ஷர்மாவின் ஆதார் எண்ணை ஹேக் செய்து அவரின் பிறந்த தேதி, முகவரி, அலைபேசி எண் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட்டிருக்கிறார். மேலும் ஷர்மாவின் வங்கிக் கணக்குகள் எதிலும் அவருடைய ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றும் தகவல் அளித்திருக்கிறார் அந்நபர்.
எலியாட் ஆண்டர்சன் என்ற பெயரில் இயங்கும் அந்த ஹேக்கர் மேலும் "இது போன்ற பாதுகாப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு தான், மக்களின் ஆதார் எண்ணை பொது இடங்களில் சமர்பிக்கவோ, இணையத்தில் வெளிப்படையாக பார்வையிடவோ அனுமதிக்கக் கூடாது" என்று அவர் அறிவுரை செய்திருக்கிறார்.
இதனைப் பார்த்த பலரும் அடுக்கடுக்காக ஷர்மாவிடம் கேள்விகள் கேட்டு குடைந்துவிட்டார்கள். இது தொடர்பாக அவரிடம் பேச முற்பட்ட போது அங்கிருந்து பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை.
ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ஆதார் தொடர்பான பாதுகாப்புகள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு பின்பு தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையில், ஆதார் தனிநபர் விபரங்களை மிகவும் பாதுகாப்புடன் வைத்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருகிறது.