திரிணாமூல் காங்கிரஸ் டெல்லியில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு, ரயில் மூலம் போராட்டக்காரர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. டெல்லிக்கு செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் பேருந்தில் கொண்டு செல்ல உள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைமையின் முதல் திட்டம்படி, ராஜ் காட்டில், நாளை போராட்டத்தை தொடங்கவும், தொடர்ந்து கிரிஷி பவனை முற்றுகையிடவும் முடிவு செய்தனர். ஆனால் தற்போது பேருந்தில் போராட்டக்காரர்கள் செல்வதால் நேரம் மாறுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு சாலை வழியாக பயணித்தால் 1,500 கிலோ மீட்டர் தூரம் வரை கடக்க வேண்டும். திரிணாமூல் காங்கிரஸ், அவசரமாக 50 தனியார் பேருந்துகளை தயார்படுத்தி, அதில் 2,500 பேர் கொண்டு செல்ல உள்ளது. ஆனால் பேருந்துகள் சென்றடைய 2 அரை நாள் தேவைப்படும். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த எம்.பி, அமைச்சர்கள், அகில இந்திய பொதுச்செயலாளர், அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்டோர் ராஜதானி ரயில் அல்லது விமானத்தில் புறப்பட உள்ளனர். இதனால் இவர்கள் மட்டுமே நாளை ராஜ் காட்டில் குறித்த நேரத்திற்கு செல்ல முடியும்.
இந்நிலையில் போராட்டகாரர்கள் நாளை மறுநாள் டெல்லிக்கு சென்றதும், அனைவரும் இணைந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்திக்க உள்ளனர்.
நேற்று காலையில், கொல்கத்தாவின் நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் போராட்டக்கார்கள், டெல்லிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தனர். ரயில் ரத்து செய்யப்பட்டதால், தனியார் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் பேருந்து காலை 9.30 மணிக்கு, இரண்டாம் பேருந்து 11.30 மணிக்கும் புறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் , “ போராட்டக்காரர்கள் பயணிக்க சிறப்பு ரயிலை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் உண்மை தோல்வியடையாது. பேருந்துகளில் தலைநகர் டெல்லிக்கு செல்ல உள்ளோம். நீதி வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநராக இருந்த, மதன் ஷா (62 வயது) கூறுகையில்” இந்த பயணத்திற்கு 60 மணி நேரம் தேவைப்படும். உணவு மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க நிறுத்தப்படும். இரவு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “ நீண்ட பயணத்தை முடித்துவிட்டு, நான் இங்கே வந்திருக்கிறேன். நேற்று மாலையில் எனது முதலாளி இங்கே இருக்க வேண்டும் என்று கூறினார். மதுராபூரில் உள்ள புரி பகுதியில் பயணிகளை காலை 5 மணிக்கு இறக்கிவிட்டுவிட்டு, இங்கே வந்துள்ளேன். ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறேன்” என்று கூறினார்.
” பேருந்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்திற்கு செல்லும்போது, அங்கிருக்கும் காவல்துறையினர் எங்களிடம் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்“ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.