பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில், மருத்துவர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
எம்டி முடித்த திருச்சியைச் சேர்ந்த மருத்துவரான அந்த நபர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.32 மணியளவில், லக்னோவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தரையிறங்கியவுடன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என மிரர் நவ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மீது புகாரளித்திருக்கும் விமான பணிப்பெண். அந்த மருத்துவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இருப்பினும், பயணிக்கு எதிராக 'தவறான நடத்தை'யில் ஈடுபட்டார் என்று மட்டும் புகாரளிக்க விமான பணிப்பெண் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், திருச்சி மருத்துவரை அழைத்துச் சென்றனர்.
ஏர்லைன் மேனேஜர் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள புகாரில், மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமான பணிப்பெண், இதனை மிகப் பெரிய விவகாரமாக்க விரும்பவில்லை என்று விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.