அதானி குழுமத்திற்கு எதிரான மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழுவை (ஜே.பி.சி) விசாரிக்கக் கோரி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு வார காலம் அமளி நீடித்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கின. மக்களவையில் செவ்வாய்க்கிழமை வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் ரயில்வே (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபாவில் டிசம்பர் 13-14 தேதிகளிலும், ராஜ்யசபாவில் டிசம்பர் 16-17 தேதிகளிலும் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதனிடையே, அதானி குழுமத்திற்கு எதிரான மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவை (ஜே.பி.சி) விசாரிக்கக் கோரியும் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி, சிவசேனா (யு.பி.டி), தி.மு.க மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டு கவனத்தை ஈர்த்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, “வேண்டும், வேண்டும்... அதானி பற்றி விவாதம் வேண்டும்” என்று தமிழில் முழக்கமிட்டார். அவர் கூறியதை இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் தமிழில் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, மக்களவையில் அதானி பெயரை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் உறுப்பினராக இல்லாதவர் பெயரை எதிர்க்கட்சியினர் கூறக் கூடாது என சபாநாயகர் கருத்து தெரிவித்தார். இதற்கு, தி.மு.க எம்.பி. ஆ.ராசா, “உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களைக் கூறி அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டும்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பாரபட்சம் இன்றி சபாநாயகர் நடக்க வேண்டும்” எனக் கூறினார். இத்தகைய விவாதங்களால் மக்களவையில் அமளி நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.