முத்தலாக் சட்ட மசோதா 3 முக்கிய திருத்தங்களுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று (10.8.18) தாக்கல் செய்யப்படுகிறது.
முத்தலாக் மசோதா:
3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது இஸ்லாமிய மதத்தின் மரபாகும். இது, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்’, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.
முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், முஸ்லிம் ஆண்களின் அச்சத்தை போக்கும்வகையிலும், அந்த மசோதாவில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
திருத்தம் செய்யப்பட்டவை:
1. முத்தலாக் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு ஜாமீன் பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது.
2. ‘முத்தலாக்’ விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது, பக்கத்து வீட்டுக்காரர் கூட புகார் கொடுக்க முடியும் என்று முன்பு இருந்தது. இனிமேல், பாதிக்கப்பட்ட மனைவியோ, அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களோ கொடுக்கும் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்படும.
3. கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவை ஒப்புதல் கிடைத்ததும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.