முத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Triple Talaq Bill : முத்தலாக் தொடர்பான புகாரினை பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ அளிக்கலாம்.

By: Updated: July 31, 2019, 11:53:04 AM

Triple Talaq Bill 2019 key points : இஸ்லாமிய பெண்களின் திருமண உறவுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை மசோதா 2019, கடுமையான அமளிகளுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின்படி, திருமணமான ஆண் தன் துணையிடம் மூன்று முறை தலாக் சொல்லி அந்த திருமண உறவை முறித்துக் கொள்ள இயலும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் சிலர் இந்த வழியில் தங்களின் மனைவிகளை கடந்த காலங்களில் பிரிந்துள்ளனர். 2015ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சாய்ரா பானு என்பவர் தன் கணவர் தன்னிடம் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்று கூறி, இம்முறையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பின்பு விஸ்வரூபம் எடுக்க துவங்கியது இந்த விவகாரம்.

மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா

மாநிலங்களவையில் அதிமுகவும் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையிலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க 99-84 என்ற ரீதியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய காங்கிரஸ், இடது சாரிகள் போன்ற எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் ஜனதா தளம் கட்சியினரும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Triple Talaq Bill 2019 key points : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

முஸ்லீம் ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை இந்த மசோதா தடுக்கிறது.

அப்படி விவாகரத்து செய்வது சட்ட விரோதமானது என்றும் அப்படி கூறப்படும் விவாகரத்து அதிகாரப்பூர்வமாக செல்லுபடி ஆகாது என்றும் உறுதி செய்கிறது இந்த மசோதா.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

இவ்வாறாக கூறி விவாகரத்து செய்யும் ஆண்கள் தங்களின் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்த மசோதா.

முத்தலாக் தொடர்பான புகாரினை பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ அளிக்கலாம்.

ஜாமீனில் வெளிவர இயலாத வகையிலும் வழக்கு பதிவு செய்ய முடியும். அதையும் மீறி முத்தலாக் கூறிய கணவன் வெளியே வர வேண்டும் எனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே பிணையில் விடுவிக்க இயலும்.

முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 கடந்து வந்த பாதை

முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 (Muslim Women (Protection of Rights on Marriage) Bill 2019) எனப்படும் இந்த மசோதா ஏற்கனவே பா.ஜ.கவின் கடந்த ஆட்சியின் போது மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் (2018, டிசம்பர் மாதம் 27ம் தேதி) அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த பின்னர் 245 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்தனர். எதிர்த்து 11 பேர் வாக்களித்தனர்.

ஐதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் பாஜகவின் பெரும்பான்மை மாநிலங்களவையில் இல்லாத காரணத்தால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டவில்லை.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அரசு அமைத்த பாஜக, மழைக்கால கூட்டத்தொடரினை ஜூன் 20ம் தேதி துவங்கியது. தன்னுடைய துவக்க உரையின் போதே குடியரசுத் தலைவர், முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

பின்பு ஜூன் 20ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூன் 21ம் தேதி மக்களவையிலும் விவாதத்திற்கு இம்மசோதா வைக்கப்பட்டது. ஜூலை 25ம் தேதி எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்ய மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 30ம் தேதி இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாலின சமத்துவத்திற்கான முக்கியமான மைல் கல்லாக இந்த சட்டம் அமையும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : முத்தலாக் மசோதா நிறைவேற்றம் – இந்தியா மகிழ்ச்சி அடைகிறது : மோடி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Triple talaq bill 2019 key points you should know

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X