scorecardresearch

முத்தலாக் தடை சட்டம் : நாடாளுமன்றத்தில் முரண்பாடாக பேசிய அதிமுக எம்.பி-க்கள்

இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்.

triple talaq, parliament, admk, mps, முத்தலாக், நாடாளுமன்றம், அதிமுக எம்.பி.க்கள்
triple talaq, parliament, admk, mps, முத்தலாக், நாடாளுமன்றம், அதிமுக எம்.பி.க்கள்

எ.பாலாஜி

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த சட்டத்தின் மீதான உரையில் அதிமுக எம்.பி. அந்த மசோதாவை எதிர்த்து பேசினார். அவர் பேசியதாவது:“இஸ்லாத்தில் மணவிலக்கு என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடப்பதில்லை. அது ஒற்றைச் சிந்தனையில் செயல்படக் கூடிய ஒன்றல்ல. அப்படி ஒன்று நடக்க வேண்டுமானல், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இஸ்லாத்தில் இடமில்லை. நீர் ஆராய்ந்து, பல படிகளைத் தாண்டி, இனிமேல் முடியாது என்ற நிலையை அடைந்தபோதுதான் இந்த முடிவுக்கே வரவேண்டும் என்று குரான் சரியத் கூறுகிறது. முஸ்லிம்கள் பின்பற்றுகிற சரியத் சட்டம் என்பது மனிதனால் எழுதப்பட்டது அல்ல. அவை இறைவனால் அருளப்பட்ட இறைச்சட்டங்கள். 1450 ஆண்டு காலமாக உலகம் முழுவது இஸ்லாமியர்களால் பின்பற்றி வரும் சட்டங்கள் அவை. இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்.

எம்.ஜி.ஆரின் திரைப்படத்தில் வருகிற ஒரு பாடலில், தவறு எனபது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்தி ஆகணும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகனும் என்று பாடுவார். அதனால், நீங்கள் வேண்டும் என்றே இதை தெரிந்து செய்வீர்களானால் நீங்கள் வருந்திதான் ஆகனும். இது முஸ்லிம்களின் தனிப்பட்டச் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. பணமதிப்பிழப்பு மூலம் கிராமப்புறத்தில் உங்கள் செல்வாக்கை இழந்தீர்கள், ஜி.எஸ்.டி மூலம் நகர்ப்புறத்தில் செல்வாக்கை இழந்தீர்கள். அதனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளீர்கள்.

கணவன் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் இது மனிதத் தன்மைக்கு மனித உரிமைக்கும் எதிரானது. இந்த சட்டம் மத நல்லிணக்கத்துக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் கொண்டுவரவில்லை இறைவனுக்கு எதிராக கொண்டு வந்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், முத்தலாக் தடை சட்டம் குறித்து மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி பேசிய ரவிந்திரநாத் குமார், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசிய கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட மாறுபட்டதாக இருந்ததோடு அவர் அந்த சட்டத்தை ஆதரித்து பேசினார்.
இப்படி ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் மாநிலங்களவையில், முத்தலாக் சட்டத்தை எதிர்த்தும் மற்றொருவர் மக்களவையில் முத்தலாக் சட்டத்தை ஆதரித்தும் பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை குறிப்பிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதிமுக முத்தலாக், தகவல் அறியும் சட்டம், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தற்போது ஆதரவு அளிக்கிறது. அதிமுக தமிழகத்தில் ஒரு நாக்காகவும், நாடாளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து, அன்வர் ராஜா கூறுகையில், மாநிலங்களவையில் முத்தலாக் சட்டம் குறித்து நான் பேசியது கட்சியின் நிலைப்பாடு. ஏனென்றால், நான் இது தொடர்பாக ஏற்கெனவே 3 முறை பேசியிருக்கிறேன். அது நூலாகவும் வந்திருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமியும் என்னை இவ்வாறு பேச சொன்னதாக கூறியுள்ளார். ஆனால், ரவிந்திரநாத் குமார் தெரிந்து பேசினாரா? இல்லை தெரியாமல் பேசினாரா? என்று தெரியவில்லை. அவர் பேசியது கட்சியின் நிலைப்பாடு அல்ல” என்று கூறினார்.

கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசிய ரவிந்திரநாத் குமார் மீது நடவடிக்கை எடுக்க கட்சியில் வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியாது. ஏனென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவருடைய தந்தைதான் உள்ளார். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் முடியாது” என்று கூறினார்.
இது குறித்து ரவிந்திரநாத் குமாருடைய கருத்தை தெரிந்துகொள்ள அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனிடையே, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களிடம் கூறுகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு என்று கூறியுள்ளார். இந்த கருத்து மேலும், முத்தலாக் தடை சட்டம் பற்றிய அதிமுகவின் நிலைப்பாட்டில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Triple talaq controversial speech of admk mps